2 குழந்தைகளை வீட்டுக்குள் பூட்டி தீ வைத்த தொழிலாளி கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆத்திரம்


2 குழந்தைகளை வீட்டுக்குள் பூட்டி தீ வைத்த தொழிலாளி கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 5 Oct 2017 3:45 AM IST (Updated: 5 Oct 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

அஞ்சுகிராமம் அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி தனது 2 குழந்தைகளை வீட்டுக்குள் பூட்டி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

அஞ்சுகிராமம்,

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே வாரியூர் பால்குளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38), கூலி தொழிலாளி. அவருடைய மனைவி முத்துச்செல்வி (37). இவர்களுக்கு ஆஷா (12) என்ற மகளும், ராஜா (11) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

கிருஷ்ணமூர்த்திக்கும், கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த முத்துச்செல்வி, கிருஷ்ணமூர்த்தியை கண்டித்தார். அதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

வீட்டுக்கு தீ வைப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, மனைவி முத்துச்செல்வியை அடித்து உதைத்ததுடன், அரிவாளால் வெட்டுவதற்கும் முயன்றதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து முத்துச்செல்வி தப்பி ஓடினார். அவரை கிருஷ்ணமூர்த்தி சிறிது தூரம் விரட்டிச் சென்றதாகவும் தெரியவருகிறது. பின்னர் மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்ப வந்துவிட்டார்.

வீட்டில் அவருடைய மகள் ஆஷா, மகன் ராஜா மட்டும் இருந்தனர். ஆத்திரம் தீராத கிருஷ்ணமூர்த்தி பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் 2 பேரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டினார். பின்னர் குடிசை வீட்டிற்கு தீ வைத்து கொடூர செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

வீடு தீப்பற்றி எரிந்ததை பார்த்ததும் கிருஷ்ணமூர்த்தியின் குழந்தைகள் அலறினர். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை கண்டதும் கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து   தப்பி ஓடிவிட் டார். அக்கம்பக்கத்தினர் சேர்ந்து தீயை அணைத்து ஆஷா, ராஜாவை மீட்டு காப்பாற்றினர்.

பெற்ற குழந்தைகளை வீட்டுக்குள் பூட்டி தன்னுடைய கணவரே தீவைத்தது குறித்து அறிந்ததும் முத்துச்செல்வி அங்கு ஓடி வந்தார். பின்னர் அவர் இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணபிள்ளை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.


Related Tags :
Next Story