மும்பையில் ‘மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்’
மும்பையில் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் பருவமழை காலம் ஆகும். இந்த ஆண்டு பருவமழை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் தீவிரமடைந்து பெய்தது. கொட்டி தீர்த்த கனமழையால் பெருநகரங்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள், அணைகள் நிரம்பின.இந்தநிலையில், ஆகஸ்டு மாதம் 29–ந் தேதி பேய் மழை கொட்டித் தீர்த்தது. அன்று ஒரு நாளில் மட்டும் மும்பையில் 300 மி.மீ. மழை அளவு பதிவானது. செப்டம்பர் மாதத்திலும் மாநிலத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது.
தற்போது மழையின் தீவிரம் குறைந்து மும்பை நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் வெயிலின் உக்கிரம் மேலும் சில நாட்களுக்கு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இதுபற்றி மும்பை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது கடலில் காற்று திசைமாறி வீசுகிறது. இதன் காரணமாகவே மும்பையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இன்னும் 3 முதல் 4 நாட்கள் வரை வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகத் தான் இருக்கும்.
மும்பையில் இன்னும் மழைக்காலம் முடியவில்லை. வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 14–ந்தேதியுடன் பருவமழை நிறைவடைந்தது. இந்த ஆண்டும் அதேபோல தான் பருவமழை முடிய வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
Related Tags :
Next Story