மாநில அரசு சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்து விட்டது
மாநில அரசு சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்துவிட்டது என்று தேவேகவுடா குற்றம்சாட்டினார்.
பெங்களூரு,
முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா நேற்று துமகூருவில் சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசுவாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நினைப்பில் ஜனதா தளம்(எஸ்) கட்சி இருப்பதாகவும், அது நடக்காது என்றும் சித்தராமையா சொல்கிறார். ஆட்சி அதிகாரம், பணம் இருப்பதால் சித்தராமையாவுக்கு ஆணவம் அதிகரித்துவிட்டது. எங்களுக்கு அத்தகைய ஆணவம் இல்லை. நாட்டில் காங்கிரஸ் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. காங்கிரசை பலப்படுத்த அக்கட்சியினர் சுற்றி வருகிறார்கள்.
எங்கள் கட்சியில் இருந்தபோது சித்தராமையாவுக்கு நான் துணை முதல்–மந்திரி பதவி கொடுத்தேன். அதன் பிறகு அவரை காங்கிரசார் தங்கள் கட்சிக்கு அழைத்துச் சென்றனர். இதற்கு முன்னாள் முதல்–மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் விஸ்வநாத் ஆகியோர் தான் காரணம். ஆனால் இப்போது எஸ்.எம்.கிருஷ்ணாவும், விஸ்வநாத்தும் அந்த கட்சியை விட்டு விலகிவிட்டனர்.இதை பார்க்கும்போது சித்தராமையாவுக்கு அதிகார போதை நிரம்பி வழிகிறது தெரிகிறது. ஜனதா தளம்(எஸ்) கட்சியை தோற்கடிப்பதாக ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. கூறுகிறார். அவரது வெற்றிக்காக நான் ஒரு மாதம் உழைத்தேன். ஆனால் அவரே எங்கள் கட்சியை விமர்சிப்பது, முட்டாள்தனமானது. 224 தொகுதிகளிலும் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம்.
வருகிற சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும். மாநில அரசு சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டுவதில் முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது. இதற்கு முற்போக்கு சிந்தனையாளர்கள் எம்.எம்.கலபுரகி, கவுரி லங்கேஷ் கொலைகளே சாட்சி. எம்.எம்.கலபுரகி கொலையாகி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. இது வெட்கக்கேடானது.இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story