மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது
x
தினத்தந்தி 6 Oct 2017 5:00 AM IST (Updated: 6 Oct 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

பலத்தமழையால் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

மதுரை,

மதுரை நகரிலும், மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழைபெய்து வருகிறது. என்றாலும் பகலில் கடுமையாக வெயிலும் கொளுத்தி வருகிறது.

இந்த நிலையில் மதுரை நகரிலும் சுற்றுப்பகுதியிலும் நேற்று முன்தினம் மாலை இடி-மின்னலுடன் பலத்தமழை கொட்டியது. ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ்நிலையம், கீழவெளிவீதி, சிம்மக்கல், கோரிப்பாளையம் மற்றும் சிலஇடங்களில் ரோடுகளில் அதிகமாக தண்ணீர் தேங்கியது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பஸ்கள் பல ஆங்காங்கே பழுது ஏற்பட்டு நின்றன. எனவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்ணீர் வடிந்ததும் போக்குவரத்து சீரானது.

பொன்னகரம் ரெயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. எனவே அந்த பகுதியில் வாகனப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரைவீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து, மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது.

இதனால் பழைய திருக்கல்யாணமண்டபம், வடக்காடிவீதி வழியாக சுவாமிசன்னதி கொடிக்கம்ப பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. தண்ணீர் புகுந்ததால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் திக்குமுக்காடி, தண்ணீரை கடந்து வெளியேறினார்கள்.

இதுகுறித்து கோவில் இணைகமிஷனர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் தேங்கியமழைநீரை அகற்ற இரவோ இரவாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கோவிலை சுற்றியுள்ள வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்புகள் அகற்றப்பட்டன. அதன்மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கோவிலின் உள்பகுதி முழுமையாக துப்புரவு பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது.

நேற்றுகாலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மதுரை விமானநிலையத்தில் 64 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மற்ற பகுதிகளில் பதிவான மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:- மேட்டுப்பட்டி-55.6, விரகனூர்-38, இடையபட்டி-25.2, மேலூர்-25, பேரணை-17, மதுரைநகர், கள்ளந்திரி-தலா 16, புலிப்பட்டி-5.6, தணியாமங்கலம்-5.2.


Next Story