கடலூரில் வடிகால் அமைக்க 24 வீடுகள்-ஒரு கோவில் இடித்து தள்ளப்பட்டது


கடலூரில் வடிகால் அமைக்க 24 வீடுகள்-ஒரு கோவில் இடித்து தள்ளப்பட்டது
x
தினத்தந்தி 6 Oct 2017 3:30 AM IST (Updated: 6 Oct 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் வடிகால் அமைக்க சாலையோரம் இடையூறாக இருந்த 24 வீடுகள் மற்றும் ஒரு கோவில் இடித்து தள்ளப்பட்டது.

கடலூர்,

வங்கக்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள கடலூர் நகரம் வழியாக இரு ஆறுகள் ஓடினாலும் சரியான வடிகால் வசதி இல்லாததால் மழைகாலங்களில் நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனை கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது மக்கள் கண்கூடாக பார்த்தனர். அப்போது கடலூர் நகரத்திலும், நகரையொட்டிய கிராமப்பகுதிகளிலும் சூழ்ந்திருந்த வெள்ளம் வடியாததால் சுமார் ஒருமாதகாலம் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர்.

குறிப்பாக சாவடி, கிருஷ்ணாகார்டன் பகுதிகளில் இடுப்பு அளவுக்கு வெள்ளம் தேங்கி நின்றதால் வீடுகளில் அடைபட்டு இருந்த மக்கள் தெர்மாகோல் படகு மூலமாகவே வெளியே வந்து உணவு பொருட்கள் வாங்கிச்சென்றனர்.

அதுபோன்றதொரு நிலை மீண்டும் வரக்கூடாது என்பதற்காக சாவடி, கிருஷ்ணாகார்டன் பகுதியில் இருந்து கெடிலம் ஆறு வரை வடிகால் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி சாவடி கெடிலம் தெருவில் சுமார் 750 மீட்டர் வரை வடிகால் கட்டப்பட்டது. இந்த வடிகாலை கெடிலம் ஆறு வரை நீட்டித்துக்கட்டினால் தான் மழைகாலத்தில் தண்ணீர் வடியும், ஆனால் கெடிலம் தெருவில் சாலையோரமாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கோவிலை இடித்து தள்ளினால் தான் வடிகால் வாய்க்காலை கெடிலம் ஆறு வரை நீட்டித்து கட்ட முடியும் என்பதால், அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீசு வினியோகித்தனர்.

இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் குடியிருக்க மாற்று இடம் கேட்டு முந்தைய கலெக்டரிடம் முறையிட்டனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த கலெக்டர், ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களுக்கு திருமாணிக்குழியில் வீட்டுமனை பட்டா வழங்கினார். இதனால் அவர்கள் அனைவரும் 2 நாட்களுக்கு முன்பு வீடுகளை காலி செய்தனர்.

இந்த நிலையில் நேற்று கடலூர் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் நேற்று காலையில் சாவடி கெடிலம் தெருவுக்கு வந்தனர். அங்கு வாய்க்கால் அமைக்க இடையூறாக இருந்த 24 வீடுகளையும், ஒரு கோவிலையும் இடித்து தள்ளினார்கள்.

அதேப்போல் கடலூர்-நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் இருந்து கெடிலம் தெருவுக்குள் நுழையும் இடத்தில் மெயின்ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றினார்கள். அந்த இடத்தை கடைக்காரர்கள் ஆக்கிரமித்திருந்ததால், பயணிகள் ரோட்டில் நின்று பஸ் ஏறும் நிலை காணப்பட்டது. இதனால் அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளையும் வருவாய்த்துறையினர் அகற்றினார்கள். விரைவில் அந்த இடத்தில் புதிய பஸ்நிலையம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் பாலமுருகன் தெரிவித்தார்.

Next Story