ஊதியம் வழங்க கோரி அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்


ஊதியம் வழங்க கோரி அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:15 AM IST (Updated: 6 Oct 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

ஊதியம் வழங்க கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. நிதிநெருக்கடி காரணமாக இந்த பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. இதன் பின்னர் பல்கலைக்கழகத்தில் இருந்து 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அரசு துறைகளில் பணி நிரவல் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் தற்போது பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஊதியமும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக ஊழியர்கள் துணை வேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அதிகாரிகள் 5-ந்தேதிக்குள் (அதாவது நேற்று) நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதையேற்று அனைவரும் அன்றைய தினம் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்தனர். இந்நிலையில் பல்கலைக்கழகம் இவர்களுக்கான ஊதியத்தை இதுவரையில் வழங்கவில்லை.

இதையடுத்து, அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழு சார்பில் பூமா கோவில் அருகே சாமியானா பந்தல் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.

அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் மாத சம்பளத்தை மாதத்தில் கடைசி வேலை நாட்களில் வழங்கிட வேண்டும், பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள பதவி உயர்வுகளை வழங்கிடுதல், தற்போது நடந்து வரும் பணிமாற்றத்தை குறித்த காலத்திற்குள் விரைவாக முடிக்க வேண்டும், பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.

மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மேல் பணிநிரவல் செய்யப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைபடி, நிலுவை தொகை, ஈட்டிய விடுப்பு, ஒப்படைப்பு தொகைகள், ஜனவரி 2017-க்கான பொங்கல் போனஸ் ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய ஓய்வு கால பணபயன்களான பணிக்கொடை, கருணை தொகை, ஈட்டியவிடுப்பு ஆகியவற்றை வழங்கிடுதல், அரசு ஏற்ற பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள சட்ட பூர்வ நிதி இழப்பான ரூ.1,700 கோடியை தமிழக அரசு பல்கலைக்கழகத்திற்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகள் வெல்லும் வரையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர்கள், ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் மருத்துவகல்லூரி மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்கலைக்கழக வளாகமே பரபரப்புடன் இருந்து வருகிறது.

Next Story