கடலூர் தாலுகா அலுவலகத்தில் கிடந்த டயரில் தேங்கிய நீரில் டெங்கு கொசு உற்பத்தி


கடலூர் தாலுகா அலுவலகத்தில் கிடந்த டயரில் தேங்கிய நீரில் டெங்கு கொசு உற்பத்தி
x
தினத்தந்தி 6 Oct 2017 7:00 AM IST (Updated: 6 Oct 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் தாலுகா அலுவலகத்தில் கிடந்த டயரில் தேங்கிய நீரில் டெங்கு கொசு உற்பத்தியாகி இருந்தது நேற்று கலெக்டர் ஆய்வு செய்த போது தெரிய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமான ஏடிஸ் கொசுக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.

இதற்காக ஒவ்வொரு வியாழக்கிழமையையும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அன்றைய தினத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தினம் நேற்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி அரசு அலுவலகங்களில் தேவையற்ற பொருட்களில் தேங்கியிருந்த மழைநீரையும், உபயோகமற்ற பொருட்களையும் அகற்றும் பணியை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியின் மூலம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கைகளில் துணியுறை அணிந்து கொண்டு, அலுவலக வளாகத்தில் இருந்த பேப்பர்கப் போன்ற தேவையற்ற பொருட்களை அகற்றினார்.

அதனைத்தொடர்ந்து கடலூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். அங்கும் அலுவலக வளாகத்தில் தேங்கிக்கிடந்த உபயோகமற்ற பொருட்களான பேப்பர்கப், டயர், குடிநீர் பாட்டில் போன்ற பொருட்களை அப்புறப்படுத்தும் பணியை பார்வையிட்டார்.

தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ள ஒரு மினி லாரியின் மீது இருந்த டயரில் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழு இருந்ததை ஊழியர்கள் கண்டு பிடித்து விட்டனர். இதையடுத்து அந்த டயரை கீழே போட்டு தண்ணீரை வெளியேற்றினார்கள். இதனால் கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது.

அதன்பிறகு தாலுகா அலுவலகத்துக்குள் சென்ற கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தாலுகா அலுவலக ஊழியர்களை அழைத்து பேசினார். அவர்களிடம், அலுவலகத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அலுவலக வளாகத்தில் தேவையற்ற டயர்கள், விளம்பர பலகைகள், டீகப்புகள், குடிநீர் பாட்டில்கள் போன்றவை இராதபடி அப்புறப்படுத்த வேண்டும் என்றும், தாலுகா அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கும் டெங்கு தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் தாலுகா அலுவலக ஊழியர்கள் சுகாதார உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அந்த உறுதி மொழி வாசகம் வருமாறு:-

நான் எனது வீட்டிலோ வீட்டின் சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் ஓடுகள், உடைந்த குடங்கள், பிளாஸ்டிக் கப்புகள் போன்ற உபயோகமற்ற பொருட்களை போட மாட்டேன். அவ்வாறு ஏதேனும் வீணான பொருட்கள் கிடந்தாலும் அவற்றை உடனே அகற்றி விடுவேன். எனது வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமெண்டு தொட்டிகள், டிரம்கள் ஆகியவற்றை கொசுபுகாத வண்ணம் மூடி வைப்பேன். வாரம் ஒருமுறை பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வேன். இதன் மூலம் ஏடிஸ் கொசுப்புழு வளராமல் தடுப்பேன். அரசு எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு ஊழியர்கள் சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, சுகாதாரபணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால், தாசில்தார்கள் பாலமுருகன், சிவா மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதேப்போல் மாவட்டத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தலைமை அலுவலர் தலைமையில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு மருந்து சேவைக் கழக நிர்வாக இயக்குனர் உமாநாத்தும் நேற்று கடலூருக்கு வந்திருந்தார். அவர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் டெங்கு கொசுப்புழு நடவடிக்கை மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக டாக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Next Story