பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் அமைச்சர்கள் திறந்து விட்டனர்


பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் அமைச்சர்கள் திறந்து விட்டனர்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:30 AM IST (Updated: 6 Oct 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்து விட்டனர்.

பவானிசாகர்,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற புகழ்பெற்றது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடி ஆகும். இதில் 15 அடி சேறும் சகதியும் போக அணையின் கொள்ளளவு 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் ஒற்றை மற்றும் இரட்டைப்படை மதகுகள் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரால் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் பாசன பகுதிகளில் 40 ஆயிரத்து 247 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைகிறது.

பவானிசாகர் அணையின் தண்ணீர் மூலம் புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய நகராட்சிகள், பவானிசாகர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் மேலும் நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகள் குடிநீர் வசதி பெறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து 82 அடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலின் இரட்டைப்படை மதகுகளில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களுக்கும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள 40 ஆயிரத்து 247 ஏக்கர் பாசன நிலங்களுக்கும் தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் இருந்து நேற்று காலை 5.30 மணி அளவில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி கீழ்பவானி வாய்க் கால் மதகை திறந்து விட்டனர். இதையடுத்து நுங்கும் நுரையுமாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இந்த தண்ணீரில் அமைச்சர்கள் மலர் தூவினர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரன், ராஜா கிருஷ்ணன், வி.பி.சிவசுப்பிரமணி, தனியரசு, விவசாய சங்க பிரநிதிகள் நல்லசாமி, பெரியசாமி, ஈரோடு பொதுப்பணித்துறை முதுநிலை பொறியாளர் நடராஜன், கீழ்பவானி பாசன திட்ட செயற்பொறியாளர் கொளந்தசாமி, பவானிசாகர் அணைக்கோட்ட பொறியாளர் திருச்செந்தில்வேலன், உதவி பொறியாளர் சுரேஷ் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இன்று (அதாவது நேற்று) காலை வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தண்ணீர் திறப்பு படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்று (அதாவது நேற்று) மாலை வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும். மேலும் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது,’ என்றனர். 

Next Story