சாலையின் குறுக்கே பாம்பு வந்ததால், நிறுத்தப்பட்ட லாரி மீது இன்னொரு லாரி மோதியதில் டிரைவர்-கிளனர் பலி


சாலையின் குறுக்கே பாம்பு வந்ததால், நிறுத்தப்பட்ட லாரி மீது இன்னொரு லாரி மோதியதில் டிரைவர்-கிளனர் பலி
x
தினத்தந்தி 6 Oct 2017 4:45 AM IST (Updated: 6 Oct 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே, சாலையின் குறுக்கே பாம்பு வந்ததால் நிறுத்தப்பட்ட லாரி மீது இன்னொரு லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் அந்த லாரியின் டிரைவர், கிளனர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சேலம்,

தர்மபுரியில் இருந்து சேலத்தை நோக்கி நேற்று மதியம் ஒரு லாரி வந்தது. இந்த லாரி சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த தாசசமுத்திரம் அக்ரஹாரம் அருகே மாதன்காடு வழியாக வந்தபோது சாலையின் குறுக்கே சாரைப்பாம்பு ஒன்று வந்துள்ளது. அந்த பாம்பை பார்த்ததும் அதன் மீது லாரி ஏறாமல் இருக்க லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார்.

இதை எதிர்பார்க்காத பின்னால் வந்த மற்றொரு லாரி நிறுத்தப்பட்ட லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் பின்னால் வந்த லாரியின் முன்பகுதி நொறுங்கி அதில் இருந்த டிரைவர் மற்றும் கிளனர் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையில் பின்னால் வந்த லாரி மோதிய வேகத்தில் நிறுத்தப்பட்ட லாரியும் நகர்ந்து சென்றதில் பாம்பின் மீது ஏறி பாம்பும் செத்தது.

விபத்து ஏற்பட்டதும் விபத்துக்கு காரணமாக லாரியை ஓட்டிவந்த டிரைவர் அங்கிருந்து உடனே தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய லாரியையும், விபத்துக்குள்ளான லாரியையும் அப்புறப்படுத்தினர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் விபத்தில் இறந்த லாரியின் டிரைவர் தர்மபுரி மாவட்டம் மாதையன்குட்டை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் தங்கதுரை (வயது 22), கிளனர் செங்கல்மேடு பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் ரமேஷ் (19) என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story