திருப்பூரில், பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வழக்கில் வேலைக்கார பெண் கைது


திருப்பூரில், பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வழக்கில் வேலைக்கார பெண் கைது
x
தினத்தந்தி 6 Oct 2017 4:30 AM IST (Updated: 6 Oct 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 10 பவுன் தாலி சங்கிலியை திருடிய வழக்கில் வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.

அனுப்பர்பாளையம்,

அவர் நகையை முகமூடி அணிந்த மர்ம ஆசாமி திருடி சென்றார் என்று கூறி நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி இருப்பது தெரியவந்து உள்ளது.

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சொர்ணபுரி ஹைலேண்ட் 2-வது வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 33). இவருடைய மனைவி ஸ்ரீநிதி, மகள் சாரா மற்றும் பாலமுருகனின் தந்தை சுப்பிரமணி, தாய் மணிமேகலைஆகியோர் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். பாலமுருகன் அவினாசி ரோடு காந்திநகரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் 15 வேலம்பாளையம் நேரு வீதியை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி பிரபா என்ற அங்கம்மாள் வீட்டு வேலை செய்து வந்தார்.
தினமும் காலை நேரத்தில் 3 மணி நேரம் பாலமுருகன் வீட்டிற்கு சென்று வீட்டு வேலைகளை செய்து விட்டு பிரபா திரும்பி சென்று விடுவார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இரவு பாலமுருகனின் தாய் அவர் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை கழட்டி அவருடைய படுக்கையில் வைத்திருந்தார்.

மறுநாள் காலை சங்கிலியை எடுத்து கழுத்தில் போட மணிமேகலை மறந்து விட்டார்.

இந்த நிலையில் மறுநாள் காலை வீட்டு வேலைக்கு சென்ற பிரபா, மணிமேகலை அறையை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது மெத்தையில் இருந்த தங்க சங்கிலியை நைசாக திருடி வைத்துக்கொண்டார்.
பின்னர் அவர் மணிமேகலையிடம் சென்று முகமூடி அணிந்த மர்ம ஆசாமி ஒருவர் பின்வாசல் வழியாக வந்து அறையில் இருந்த மணிமேகலைக்கு சொந்தமான தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு தப்பி செல்வதாக தெரிவித்தார். ஆனால் பிரபா கூறியதை பாலமுருகன் குடும்பத்தினர் நம்பவில்லை. மேலும் பிரபா மீது அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து பாலமுருகன் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவருடைய புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் சந்தேகத்தின் பேரில் வேலைக்கார பெண் பிரபாவிடமும் விசாரணை நடத்தினார்கள். இதில் பிரபா முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் மணிமேகலைக்கு சொந்தமான 10 பவுன் தாலி சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் முகமூடி அணிந்த மர்ம நபர் சங்கிலியை திருடி சென்றார் என்று கூறி நாடகமாடியதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறிமுதல் செய்தனர். நகை திருடிய வழக்கில் வேலைக்கார பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story