நாகர்கோவில் சிறைக்கு அழைத்து வந்த போது தப்பி ஓடிய 2 கைதிகளில் ஒருவர் சிக்கினார்


நாகர்கோவில் சிறைக்கு அழைத்து வந்த போது தப்பி ஓடிய 2 கைதிகளில் ஒருவர் சிக்கினார்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:45 AM IST (Updated: 6 Oct 2017 3:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் சிறைக்கு அழைத்து வந்த போது போலீஸ் பிடியில் இருந்து தப்பிய 2 கைதிகளில் ஒருவர் பிடிபட்டுள்ளார். குழித்துறை ஆற்றில் உற்சாகமாக குளித்தவரை சப்-இன்ஸ்பெக்டர் மடக்கி பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

களியக்காவிளை,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). இவர் மீது நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களிலும், மும்பை நகர போலீஸ் நிலையங்களிலும் குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை போலீசார் அவரை கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்தனர்.

அப்போது, அதே சிறையில் இருந்த சேலத்தை சேர்ந்த டேவிட் என்ற தேவேந்திரன் (23) என்பவருடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மணிகண்டனும், டேவிட்டும் மும்பை சிறையில் இருந்து 2 மாதங்களுக்கு முன்பு தப்பினர். பின்னர் அவர்கள் நாகர்கோவிலுக்கு வந்து சுற்றி திரிந்தனர். நாகர்கோவில் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ஒரு வழக்கு சம்பந்தமாக மணிகண்டன் மற்றும் டேவிட்டை ஆஜர்படுத்த நெல்லை கோர்ட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரையும் நெல்லை போலீசார் மீண்டும் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் சிறையில் அடைக்க அழைத்து வந்தனர். மணிகண்டன், டேவிட் ஆகிய 2 பேரின் கைகளையும், ஒரே கைவிலங்கில் பூட்டி போலீசார் அழைத்து வந்தனர்.

சிறை அருகே வந்து இறங்கிய போது ஒருவர் கைவிலங்கில் இருந்து எப்படியோ தனது கையை உருவிவிட்டார். இதனால் மணிகண்டனும், டேவிட்டும் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு கண் இமைக்கும் நேரத்தில் ஆளுக்கொரு திசையில் தப்பி ஓடினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெல்லை போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். ஆனால், அவர்களை பிடிக்க முடியவில்லை. உடனடியாக போலீசார் உஷார்படுத்தப்பட்டு, குமரி மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

இந்தநிலையில், நேற்று கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர், ஒரு வழக்கு தொடர்பாக குழித்துறை கோர்ட்டுக்கு சென்றார். பின்னர், அவர் மாலை 4 மணியளவில் சீருடை அணியாமல், சாதாரண உடையில் குழித்துறை ஆற்றின் சப்பாத்து பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆற்றில் குளித்து கொண்டிருந்த 2 பேர் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அருகில் சென்று பார்த்த போது, நாகர்கோவிலில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய மணிகண்டன், டேவிட் என்பது தெரிய வந்தது. உடனே, அவர்களை பிடிக்க மோகன அய்யர் முயன்றார்.

உடனே, உஷாரான அவர்கள் இருவரும் கரையேறி தப்பி ஓடினர். அவர்களை மோகன அய்யர் துரத்தினார். அத்துடன் அந்த பகுதியில் நின்ற பொதுமக்களை உதவிக்கு வருமாறு அழைத்தார். ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை. இதற்கிடையே இருவரும் இரண்டு புறமாக சிதறி ஓடினர். அவர்களில் மணிகண்டனை மோகன அய்யர் தனியாக துரத்தி பிடித்தார். டேவிட் தப்பி ஓடி விட்டார்.

தொடர்ந்து, மணிகண்டனின் கை, கால்களை கட்டி வைத்து விசாரணை நடத்தினார். கைதிகள் இரண்டு பேர் வைத்திருந்த பையானது ஆற்றின் கரையில் இருந்தது. அவற்றை சோதனையிட்ட போது, ஏதோ ஒரு கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளி விளக்கு, பாத்திரம் போன்றவை இருந்தன. மேலும், அவர்கள் இருவரும் குமரி மாவட்டத்தில் இருந்து ஒரு காரை திருடி இரவோடு இரவாக கேரளாவுக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில்தான் குழித்துறை ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது மணிகண்டன் போலீசிடம் சிக்கியுள்ளார்.

இதற்கிடையே தப்பியோடிய டேவிட்டை பிடிக்க அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் குழித்துறை, மார்த்தாண்டம், ஞாறான்விளை போன்ற பகுதிகளில் ரோந்து சென்று தேடினர்.

மேலும், மணிகண்டன் தப்பி ஓடும் போது கீழே விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தால் குழித்துறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தப்பி ஓடிய டேவிட்டை பிடிக்க நாகர்கோவில் டவுண் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story