மானாமதுரை வாரச்சந்தையில் முறைகேடாக பயன்படுத்திய தராசு, எடைக்கற்கள் பறிமுதல்


மானாமதுரை வாரச்சந்தையில் முறைகேடாக பயன்படுத்திய தராசு, எடைக்கற்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Oct 2017 3:56 AM IST (Updated: 6 Oct 2017 3:56 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை வாரச்சந்தையில் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்ட தராசு மற்றும் எடைக் கற்களை பறிமுதல் செய்தனர்.

மானாமதுரை,

மானாமதுரையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று வாரச் சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தையில் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகள், பழங்கள், பூக்கள், பல சரக்கு சாமான்கள், கருவாடு, ஜவுளி துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் என விற்பனை செய்து வருகின்றனர்.

இது தவிர மானாமதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பலரும் தங்களது தோட்டத்தில் விளைந்த காய்கறி பொருட்களை இங்கு வந்து விற்பனை செய்து விட்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாரச்சந்தையில் காய்கறிகள் வாங்க வரும் பொது மக்களை சில வியாபாரிகள் தாங்கள் பயன்படுத்தும் எடை கற்களின் மூலம் மோசடி செய்து ஏமாற்றுவதாக புகார் வந்தது.

இது தவிர சில வியாபாரிகள் முத்திரையிடப்படாத எடைக்கற்களை பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சேதுராஜ், சந்திரசேகரன், சேதுபதி மற்றும் மானாமதுரை போலீசார் இந்த வாரச்சந்தையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில வியாபாரிகள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வியாபாரிகளிடம் இருந்து தராசு, முத்திரையில்லாத எடைக் கற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து இது முதல் முறை என்பதால் அவர்களை எச்சரித்தனர். மேலும் இந்த சந்தையில் காய்கறிகளை எடை போடாமல் கூறு போட்டு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் வியாபாரிகள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story