கடலோர கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்


கடலோர கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:00 AM IST (Updated: 6 Oct 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமங்களில் டெங்கு காய்ச்சலை தடுக்க சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

பனைக்குளம்,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் உள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட கலெக்டர் நடராஜன் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

துறைவாரியாக கூட்டங்கள் நடத்தி அலுவலர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும் மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை, மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் ஆகியோரது தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மூலம் டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்தவும், மாவட்டத்தில் டெங்கு கொசுக்களை ஒழிக்கவும் பணிகளை துரிதப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் டெங்கு காய்ச்சலை தடுக்க தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் என்மனங்கொண்டான் ஊராட்சி உச்சிப்புளியில் போலீஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார். முகாமுக்கு ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை, சுகாதார பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராஜா ஆலோசனையின்பேரில் ஊராட்சி செயலர் பாதராமன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் முத்துக் குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல உச்சிப்புளி நேஷனல் அகாடமி பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் ரேணுகாதேவி முன்னிலையில் சுகாதாரத்துறையினர் டெங்கு காய்ச்சல் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story