தேனி அருகே வீரபாண்டியில் முல்லைப்பெரியாற்றில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன்


தேனி அருகே வீரபாண்டியில் முல்லைப்பெரியாற்றில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:46 AM IST (Updated: 6 Oct 2017 4:46 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே முல்லைப்பெரியாற்றில் குளித்த மாணவன், நீரில் இழுத்துச் செல்லப்பட்டான். அவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தேனி,

தேனி மாவட்டம் போடி வினோபாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் விஜய் (வயது 13). இவன் போடியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலையில் விஜய் தனது நண்பர்கள் 2 பேருடன் தேனி அருகே உள்ள வீரபாண்டிக்கு வந்தான். காலை 11 மணியளவில் அங்குள்ள முல்லைப்பெரியாறு தடுப்பணையில் 3 பேரும் குளித்துக் கொண்டு இருந்தனர். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், ஆற்றில் நீர்வரத்து அதிகம் உள்ளது.

தடுப்பணையை தாண்டி தண்ணீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில், ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த விஜய் திடீரென நீரில் மூழ்கினான். இதில் அவனை தண்ணீர் இழுத்துச் சென்றது. அவனுடன் சென்ற நண்பர்கள் சத்தம் போட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் வந்து விஜய்யை காப்பாற்ற முயன்றனர்.

தகவல் அறிந்ததும் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவனை கண்டுபிடிக்க முடியாததால் தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி விஜய்யை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்றதால் அவனை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. தடுப்பணையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்திச் சென்று அவனை தேடும் பணியில் தீயணைப்புபடை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு 8 மணி வரை தேடியும், அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து அவனை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்களும், பொதுமக்களும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story