திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக புதுவை உருவாக்கப்படும்


திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக புதுவை உருவாக்கப்படும்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:57 AM IST (Updated: 6 Oct 2017 4:57 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக புதுவை உருவாக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

காலாப்பட்டு,

புதுவை மாநிலத்தில் தனிநபர் கழிவறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி குறித்து அமைச்சர் கமலக்கண்ணன் ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட சேதராப்பட்டில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று பார்வையிட்ட அமைச்சர், தனிநபர் கழிவறை கட்டாத வீடுகளில் விரைவில் கட்டும்படி அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை மாநிலத்தில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கும் வகையில் மத்திய–மாநில அரசுகள் இணைந்து கழிவறை கட்டுவதற்கு பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்கி வருகிறது. முன்னதாக புதுவையில் 45 ஆயிரத்து 403 வீடுகளில் கழிவறை இல்லாதது கண்டறியப்பட்டது. இதில் முதல்கட்டாக 19 ஆயிரம் வீடுகளில் கழிவறை கட்டுவதற்கு நிதி வழங்கப்பட்டது. தற்போது 3 ஆயிரம் கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் இந்த கழிவறைகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக புதுவை உருவாக்கப்படும். புதுவையிலேயே ஊசுடு தொகுதியில் பொறையூர் கிராமம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுவையில் தற்போது மணல் தட்டுப்பாடு உள்ளது. இது தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி வழிகாட்டுதலின்படி இன்னும் ஓரிரு வாரத்தில் மணல் பிரச்சினையை சரிசெய்ய நானும், பொதுப்பணித்துறை அமைச்சரும் தமிழக முதல்–அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் புருஷோத்தமன், நாகரத்தினம், பக்கிரி மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story