நாராயணசாமி–வைத்திலிங்கம் தொகுதிகளில் கவர்னர் அதிரடி ஆய்வு
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக முதல்–அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோரின் தொகுதிகளில் கவர்னர் கிரண்பெடி அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி,
புதுவையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் ஒரு பக்கம் கூட்டங்கள் நடத்துவது, கொசுவை கட்டுப்படுத்த மருந்துகள் தெளிப்பது என்று நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் கவர்னர் கிரண்பெடியும் களத்தில் இறங்கி பணிகளை தொடங்கியுள்ளார்.
அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து குறைகேட்பது, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று அவரது நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இதன் ஒருகட்டமாக நேற்று காலை கவர்னர் கிரண்பெடி சபாநாயகர் வைத்திலிங்கத்தின் தொகுதியான காமராஜ் நகர் தொகுதிக்கு அதிகாரிகளுடன் சென்றார். மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் கிருஷ்ணாநகருக்கு சென்ற அவர் காலியிடங்களில் மழைநீர், குப்பைகள் தேங்கியிருப்பதை பார்வையிட்டார்.
அப்பகுதி மக்களிடம் பேசிய கவர்னர் கிரண்பெடி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தினார். டெங்கு காய்ச்சலை தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.
அதன்பின் முதல்–அமைச்சர் நாராயணசாமியின் தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதிக்கு வந்தார். பெரியார் நகர் வீதிகளில் நடந்து சென்று பார்வையிட்டார். அதன்பின் சமுதாய நலக்கூடத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார். கவர்னரின் இந்த ஆய்வின்போது கலெக்டர் வல்லவன், உள்ளாட்சித்துறை இயக்குனர் முகமது மன்சூர், நகராட்சி ஆணையர்கள் கணேசன், ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவையில் டெங்கு கடந்த ஆண்டைவிட 700 சதவீதம் அதிகரித்துள்ளதா? 30 சதவீதம் அதிகரித்துள்ளதா? என்பது பிரச்சினையல்ல. டெங்கு காய்ச்சல் இல்லாத நிலை வரவேண்டும். இதற்காக அரசின் துறைகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
தற்போது நாளும், அரசு அதிகாரிகளும் இங்கு வந்துள்ளோம். எங்களிடம் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கிறோம். காலிமனைகளில் கழிவுநீர், குப்பைகளை தேங்கவிடக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம்.
அவ்வாறு காலி மனைகளில் குப்பைகள், தண்ணீர் தேங்கினால் அதை 7 நாட்களுக்குள் அகற்றும்படி மனை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன்பின் மனை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.
புதுவை நகராட்சி ஆணையர் கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
கொசுவை ஒழிக்க புதுவை நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் வீட்டின் உட்புற பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின் கைகளில்தான் உள்ளது. இதுதொடர்பாக சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
காலிமனைகளில் தண்ணீர், குப்பைகள் தேங்கியிருந்தால் அத்தகைய காலி மனைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். 7 நாட்களில் அவை அகற்றப்படாவிட்டால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு ஆணையர் கணேசன் கூறினார்.
நியமன எம்.எல்.ஏ. விவகாரம், டெங்கு காய்ச்சல் தடுப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவர்னர் கிரண்பெடிக்கு, முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை, சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோருக்கு இடையே பகிரங்க மோதல் நடந்து வரும் நிலையில் அவர்களின் சொந்த தொகுதியில் கவர்னரின் இந்த ஆய்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.