சித்தராமையா அரசின் ஊழலை ஒவ்வொன்றாக வெளியிடுவேன்


சித்தராமையா அரசின் ஊழலை ஒவ்வொன்றாக வெளியிடுவேன்
x
தினத்தந்தி 6 Oct 2017 5:14 AM IST (Updated: 6 Oct 2017 5:13 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையா அரசின் ஊழலை ஒவ்வொன்றாக வெளியிடுவேன் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

சித்தராமையா அரசின் ஊழலை ஒவ்வொன்றாக வெளியிடுவேன் என்று எடியூரப்பா கூறினார்.

கர்நாடக பா.ஜனதா சார்பில் வால்மீகி ஜெயந்தி விழா பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஊழல் தடுப்பு படையை சித்தராமையா தனது கைப்பாவையாக பயன்படுத்துகிறார். பொதுமக்களுக்கு நல்லது செய்வதற்கு பதிலாக யாரையோ பாதுகாக்க அவர் முயற்சி செய்கிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பயப்பட தேவை இல்லை.

சித்தராமையா அரசு கடந்த 5 ஆண்டுகளில் செய்த ஊழல்களை ஒவ்வொன்றாக வெளியிடுவேன். முன்னாள் மந்திரி ஷோபா, இந்த அரசின் ஊழலை வெளிப்படுத்தியுள்ளார். நாளை(சனிக்கிழமை) எங்கள் கட்சியின் இன்னொரு நிர்வாகியான புட்டசாமி ஒரு ஊழலை பகிரங்கப்படுத்துவார். காங்கிரஸ் அரசின் ஊழலை பா.ஜனதா சகித்துக்கொள்ளாது. 3 நாட்களுக்கு ஒருமுறை இந்த அரசின் ஊழலை மக்களிடம் வெளிப்படுத்துவோம்.

அரசு நடத்தும் வால்மீகி ஜெயந்தி விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. நான் அந்த விழாவில் கலந்து கொண்டால், எனக்கு ஆதரவாக மக்கள் கோஷங்கள் எழுப்பிவிடுவார்களோ என்ற பயம் சித்தராமையாவுக்கு இருந்திருக்கும். சித்தராமையா தினமும் பொய் பேசுகிறார். இதை அவர் கைவிட வேண்டும். விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக சித்த ராமையா அறிவித்தார். இதுவரை அதை நடைமுறைப்படுத்தவில்லை. பொய் பேசுவதை விட்டுவிட்டு கடன் தள்ளுபடி அறிவிப்பை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story