நலத்திட்டங்களை தடுப்பதற்கு ஒரு பதவி தேவையா? நாராயணசாமி கேள்வி


நலத்திட்டங்களை தடுப்பதற்கு ஒரு பதவி தேவையா? நாராயணசாமி கேள்வி
x
தினத்தந்தி 6 Oct 2017 5:17 AM IST (Updated: 6 Oct 2017 5:17 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நலத்திட்டங்களை தடுப்பதற்கு ஒரு பதவி தேவையா? என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கட்டிட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில் கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி வெகுமதி கூப்பன் வழங்கும் விழா மூலக்குளம் ரீனா மகாலில் நேற்று நடந்தது. விழாவில்முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு கட்டிட தொழிலாளர்களுக்கு வெகுமதி கூப்பன்களை வழங்கி பேசியதாவது:–

புதுவை மாநிலத்தில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டிட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற முனைவில் அரசு செயல்பட்டு வருகிறது. நமது மாநில வருவாய் பெருகியபோதிலும் மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய நிதியையே வழங்குகிறது.

புதுச்சேரிக்கு தரவேண்டிய நிதி ஆதாரத்தை தரவேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். கடந்த காலங்களில் புதுவையில் இலவச அரிசி வழங்குவதற்கான ஒப்புதலை கவர்னர் 3 மாதங்களுக்கு முன்பே வழங்குவார். ஆனால் இப்போது ஒவ்வொரு மாதமும் ஒப்புதல் பெறவேண்டும் என்று கவர்னர் கோப்புகளை திருப்பி அனுப்புகிறார்.

அவர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். திட்டங்களை தடுப்பதற்கு ஒரு பதவி தேவையா? மேலும் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் மிரட்டுகிறார். இதனால் கோப்புகளில் கையெழுத்திட அதிகாரிகள் பயப்படுகின்றனர்.

கவர்னருக்கு எதிராக டெல்லியில் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பாக கட்சி மேலிடத்திடம் நான் ஏற்கனவே அனுமதி கேட்டேன். ஆனால் கட்சி மேலிடம் இதுதொடர்பாக எதுவும் சொல்லவில்லை. கவர்னரின் செயல்பாடுகளால் நாம் மனம் தளரக்கூடாது. எதிர்த்து போராட வேண்டும். மக்கள் நம் பக்கமே உள்ளனர். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தத்தான் மாநில அரசு உள்ளது. அதிகாரிகள் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டிட தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக காப்பீடு திட்டமும், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும், கேண்டீன் வசதி ஏற்படுத்தி தரும் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

விழாவில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ., கலெக்டர் வல்லவன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story