கள்ளக்காதலனுடன் மனைவி சென்றதால் தொழிலாளி தற்கொலை


கள்ளக்காதலனுடன் மனைவி சென்றதால் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 6 Oct 2017 5:26 AM IST (Updated: 6 Oct 2017 5:26 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி,

ஆரணி அருகே மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 31), நெசவுத் தொழிலாளி. இவருடைய மனைவி புவனேஸ்வரி (27). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மதன்குமார் (6) என்ற மகனும், ஓவியா (3) என்ற மகளும் உள்ளனர்.

அதே கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (41) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் புவனேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபின்னர் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதை அறிந்த காமராஜ் தனது மனைவி புவனேஸ்வரியையும், பிரகாசையும் கண்டித்துள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரகாஷ், புவனேஸ்வரியை கடத்தி சென்றுவிட்டதாக களம்பூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. பின்னர் ஒருவாரத்திற்கு பிறகு புவனேஸ்வரி மீட்கப்பட்டார். இந்த நிலையில் கணவன்–மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரி மற்றும் குழந்தைகளை பிரகாஷ் கடத்தி சென்றுவிட்டதாக களம்பூர் போலீசில் காமராஜ் புகார் செய்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, விவகாரத்து கேட்டு காமராஜூக்கு, புவனேஸ்வரி நேற்று முன்தினம் வக்கீல் நோட்டீசு அனுப்பினார். விவாகரத்து நோட்டீசை பார்த்ததும் காமராஜ் அதிர்ச்சியடைந்தார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த காமராஜ் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தூணில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் காமராஜ் தூக்கில் பிணமாக தொங்கியதை உறவினர்கள் பார்த்தனர்.

அவரது உடலை மீட்டு, ஆரணி–வடமாதிமங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும், களம்பூர் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காமராஜ் சாவுக்கு காரணமான, அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து காமராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story