விவசாயிகளுக்காக 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் தயார்


விவசாயிகளுக்காக 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் தயார்
x
தினத்தந்தி 6 Oct 2017 5:28 AM IST (Updated: 6 Oct 2017 5:28 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கோட்ட வன விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்காக 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது என்று வன விரிவாக்க மைய அலுவலர் உமா சங்கர்தெரிவித்தார்.

திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

திருவண்ணாமலை கோட்ட வன விரிவாக்கம் மையம் சார்பில் தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் சார்பில் பட்டா நிலங்களில் மரம் வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்காக 2 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இங்கு தேக்கு, வேங்கை, ரோஸ்வுட், செம்மரம், பூவரசு, நெல்லி, பாதாம் போன்ற மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஓரளவிற்கு மழை பெய்து உள்ளதால், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் மரங்கள் வளர்க்க முன்வர வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் ஒரு விவசாயிக்கு 2,500 மரக்கன்றுகள் வரை இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள் 2 வருடங்கள் கழித்து நன்றாக வளர்ந்து இருந்தால், அதனை பராமரிக்கும் விவசாயிக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இலவச மரக்கன்று பெற விரும்புவோர் சிட்டா நகல், குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை நகல், 3 பாஸ்போர்டு சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் திருக்கோவிலூர் ரோட்டில் வன விரிவாக்கம் மையத்தை நேரில் அணுகலாம்.

அதுமட்டுமின்றி விவசாயிகள் தவிர கல்வி நிறுவனங்கள், கோவில் போன்ற இடங்களுக்கு மரக்கன்றுகள் பெற விரும்புவோருக்கு மானிய விலையில் மரக்கன்று வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story