ஆம்பூர் அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு விண்ணமங்கலம் ஏரி நிரம்பியது
ஆம்பூர் அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு விண்ணமங்கலம் ஏரி நிரம்பியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் விண்ணமங்கலம் ஏரி அமைந்துள்ளது. ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த பலத்த மழையாலும், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் விண்ணமங்கலம் ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணமாக விண்ணமங்கலம் ஏரி நேற்று காலையில் நிரம்பியது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரி தற்போதுதான் நிரம்பி வழிகிறது. ஏரி நிரம்பி வழிந்ததால் விண்ணமங்கலத்தை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் ஏரிக்கு வந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
இந்த ஏரி நிரம்பி வழிந்ததால் ஆலாங்குப்பம், சோலூர், சாணாங்குப்பம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விண்ணமங்கலம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியதால் அப்பகுதியில் உள்ள கிணறுகளின் நீர்மட்டமும் உயரும், பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்களும், விவசாயிகளும் கூறினர்.பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும், பேரணாம்பட்டு மலட்டாற்று வெள்ளத்தாலும் பச்சகுப்பம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்னூர் – வடகரை, ஆலாங்குப்பம்– வீராங்குப்பம் பகுதி பாலாற்றில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என வருவாய்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.