திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 27 பேர் பாதிப்பு


திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 27 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2017 5:36 AM IST (Updated: 6 Oct 2017 5:36 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணப்பந்தல் கிராமத்தில் நேற்று டெங்கு நோய் தடுப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு ஒவ்வொரு வீடு வீடாக சென்று கழிவுநீர் தேங்கி உள்ள பாத்திரம், டயர் போன்றவற்றை அகற்றினார்.

இதனையடுத்து 250 கிராம் எடையுள்ள பிளிச்சிங் பவுடர், 50 கிராம் எடையுள்ள வேம்பு கலந்த சோப்பு ஆகியவற்றை வழங்கி சுத்தத்தை கடைப்பிடிப்பது குறித்தும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பொதுமக்களுக்கு ஏற்படாத வகையில் தடுத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரெயில் நிலையம், பஸ் நிலையம், பள்ளிக் கூடங்கள், கோவில்கள் போன்று பொதுமக்கள் கூடும் இடங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 877 குடியிருப்புகள் உள்ளன. அனைத்து குடியிருப்புக்கும் தலா 250 கிராம் விதம் ஒவ்வொரு வீட்டிற்கும் பிளிச்சிங் பவுடரும், 50 கிராம் வேம்பு கலந்த கிருமி நாசினி சோப்பு ஒன்றும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story