வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு தடுப்பு முன்னேற்பாடுகள் தயார்


வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு தடுப்பு முன்னேற்பாடுகள் தயார்
x
தினத்தந்தி 6 Oct 2017 5:41 AM IST (Updated: 6 Oct 2017 5:41 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு தடுப்பு முன்னேற்பாடுகள் தயார்நிலையில் இருப்பதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ராமன்நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, டெங்கு காய்ச்சல் வார்டு பகுதிகளை ஆய்வுசெய்தார். மேலும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது–

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு ஏதும் இல்லை. தற்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு என தனித்தனியாக வார்டுகள் உள்ளது. அதில் 30 படுக்கைகள் உள்ளன. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். அந்த பிரிவுகளில் மருந்து, மாத்திரைகள், வென்டிலேட்டர், நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ் கரைசல் உள்ளிட்டவைகளும் இருக்கும்.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதத்தில் பெரியவர்கள் 2 ஆயிரம் பேருக்கும், 690 குழந்தைகளுக்கும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை பெற அதிகளவில் வருகின்றனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நாட்களில் டெங்கு தடுப்பு முகாம்கள் மற்றும் துப்புரவு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது மழை பெய்து வருவதால் கொசுக்களின் உற்பத்தி அதிகளவில் இருக்கும். கொசுக்கள் உருவாவதை தடுக்க சுகாதார துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் கொசுக்களை ஒழிக்க ஒத்துழைப்பு தரவேண்டும். காய்ச்சல் நோய் வந்தால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story