‘மரம் வளர்ப்போம், மண்ணுயிர் காப்போம்’ தூத்துக்குடி மாவட்டத்தை பசுமையாக்க புதிய திட்டம் இன்று தொடங்குகிறது


‘மரம் வளர்ப்போம், மண்ணுயிர் காப்போம்’ தூத்துக்குடி மாவட்டத்தை பசுமையாக்க புதிய திட்டம் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 7 Oct 2017 2:30 AM IST (Updated: 6 Oct 2017 7:19 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘மரம்வளர்ப்போம், மண்ணுயிர் காப்போம்’ என்னும் புதிய திட்டம் இன்று(சனிக்கிழமை) தொடங்கப்படுகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘மரம்வளர்ப்போம், மண்ணுயிர் காப்போம்’ என்னும் புதிய திட்டம் இன்று(சனிக்கிழமை) தொடங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கூறியதாவது:–

மரம் வளர்ப்பு திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மரக்கன்றுகள் அதிக அளவில் நட்டு வளர்ப்பதற்காகவும், மாவட்டத்தை பசுமையாக்கவும் “மரம் வளர்ப்போம், மண்ணுயிர் காப்போம்“ என்ற திட்டம் நாளை(அதாவது இன்று) தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட உள்ளன.

அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், குளக்கரைகள், ஆற்றோரங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. தூத்துக்குடி–நெல்லை 4–வழிச்சாலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு மரக்கன்று நடப்பட உள்ளது. இதில் 10 மீட்டருக்கு ஒரு மரம் என்ற வகையில் சுமார் 3 ஆயிரம் மரங்கள் நடப்பட உள்ளன. முதல்கட்டமாக 1,000 மரங்கள் நடப்படுகிறது. இதில் வேம்பு, புங்கை உள்ளிட்ட மரங்கள் நடப்படுகிறது. இது தவிர பனைமரங்களை வளர்ப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக விதைகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

தூய்மை பணி

அதே போன்று, மாவட்டத்தில் ஜீவாதாரமாக விளங்கி வரும் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. நாளை(அதாவது இன்று), முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம் அணையின் மேல் பகுதி, ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ்பகுதி, அப்பன் கோவில், ஆத்தூர், முக்காணி ஆகிய 6 இடங்களில் தூய்மை பணி நடக்கிறது. அப்போது, ஆற்றின் நடுவே உள்ள கருவேல மரங்கள், அமலைச்செடிகள் முற்றிலும் அகற்றப்பட உள்ளன. அந்த இடங்களில் வேறு மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன. இதில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் கலந்து கொள்கின்றனர்.

புத்தகத்திருவிழா

தூத்துக்குடியில் நடந்து வரும் புத்தகத்திருவிழா மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. இதனை 73 கல்வி நிறுவனங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 382 மாணவ–மாணவிகளும், 3 ஆயிரத்து 186 பொதுமக்களும் ஆக மொத்தம் 12 ஆயிரத்து 568 பேர் பார்வையிட்டு உள்ளனர். இந்த புத்தகத்திருவிழா வருகிற 11–ந் தேதி வரை நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மழை வெள்ளம் வீணாக செல்லாமல் சேகரிக்கும் வகையில் 437 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளன.

தனிநபர் இல்ல கழிப்பறை

தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தனிநபர் இல்ல கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 2015–16–ம் ஆண்டு 146 பஞ்சாயத்துகளிலும், 2016–17–ம் ஆண்டு 127 பஞ்சாயத்துகளிலும், 2017–18–ம் ஆண்டு 130 பஞ்சாயத்துகளிலும் முழுமையாக தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. 2017–18–ம் ஆண்டில் மட்டும் 51 ஆயிரத்து 206 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

முழு சுகாதார மாவட்டம்

இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 12 பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு உட்பட்ட 403 பஞ்சாயத்துகளும் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத பஞ்சாயத்துகளாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்திலேயே 2017–18–ம் ஆண்டில் முதல் முழுசுகாதார மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் மாற்றப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, உதவி கலெக்டர் தீபக்ஜேக்கப், உதவி கலெக்டர்(பயிற்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story