வடகாடு பகுதியில் புதிதாக சாலை அமைக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
ராமேசுவரம் வடகாடு பகுதியில் புதிதாக சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் நகராட்சி அலுவலத்தில் முற்றுகையிட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் நகராட்சி பகுதியில் உள்ளது வடகாடு கிராமம். இங்கு சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் அந்த பகுதியில் புதிய சாலை அமைத்து தரக்கோரி மீன் பிடி தொழிற் சங்க பொறுப்பாளர் கருணாமூர்த்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தாலுகா செயலாளர் ஆரோக்கிய நிர்மலா உள்பட வடகாடு கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் நேற்று மனுவுடன் சென்று நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது வடகாடு கிராமம் தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும் ராமேசுவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தான் உள்ளது. இந்த கிராமத்தின் சாலை நகராட்சி சாலையோடு இணைந்தே உள்ளது. தற்போது இந்த சாலை கிராம மக்கள் நடந்து செல்லக்கூட பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்து மோசமாக காட்சியளித்து வருகிறது. இதனால் மக்களின் அவசர தேவைகளுக்கு கூட ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட எந்தவொரு வாகனங்களும் வந்து செல்ல முடியாத ஒரு நிலை இருந்து வருகிறது.
வடகாடு செல்லும் சாலை ஓரத்தில் அரசு புறம் போக்கு இடத்தில் ராமேசுவரம் நகர் பகுதி முழுவதும் அள்ளப்படும் குப்பையை நகராட்சி வாகனங்கள் மூலம் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நகராட்சி வாகனங்களால் தான் இந்த சாலையும் முழுமையாக சேதமடந்துள்ளது. எனவே இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் உடனடியாக வடகாடு வரை சாலையை அகலப்படுத்தி புதிதாக தார் சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வருகிற 20–ந் தேதி வடகாடு கிராமமக்கள் அனைவரும் மாட்டு வண்டிகளில் வந்து நகராட்சி அலுவலகத்தில் குடும்பத்தோடு குடியேறும் போராட்டத்தை நடத்துவோம் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
இதையடுத்து நகராட்சி என்ஜினியர் வரதராஜன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தைநடத்தி, இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்து அனுமதி கிடைத்தவுடன் வடகாடு கிராமத்திற்கு புதிதாக சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர்.