சரக்கு,சேவை வரியை திரும்ப பெறக்கோரி கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
சரக்கு,சேவை வரியை திரும்ப பெறக்கோரி கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடி எமனேசுவரம் கைத்தறி நெசவாளர் தொழிற்சங்கங்களின் போராட்டக்குழு, ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம், சிறுபட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்கம், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பெடரேசன், கூட்டுறவு சங்க பணியாளர் சங்கம் ஆகியவை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி எமனேசுவரத்தில் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கோவிந்தன் தலைமை தாங்கினார். குப்பு சாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது கைத்தறி தொழில் மீது மத்திய அரசு விதித்துள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு நிலுவையில் உள்ள ரிபேட் பாக்கி ரூ. 18 கோடியை உடனே வழங்க வேண்டும்.
ஓய்வூதிய தொகையை ரூ.1000–ல் இருந்து ரூ.3,000–ம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் லோக நாதன் சங்கர் பத்மாநாபன், அய்யான், பெருமாள், சேஷ்ய்யன், கோதண்டராமன், மோதிலால், சுப்பிரமணியன் உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் கலந்துகொண்டனர்.