பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. பிரச்சினையால் ரூ.1000 கோடி பட்டாசு உற்பத்தி குறைப்பு தட்டுப்பாட்டால் வெளிமாநில வியாபாரம் பாதிப்பு

சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் உற்பத்தி செய்யாமல் குறைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் முழுவதும் 800–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் ஆண்டு தோறும் சுமார் ரூ.4000 கோடி மதிப்புள்ள பட்டாசுகளை தயாரித்து இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படும். இந்த தொழிலில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாவும் ஈடுபட்டு வருகிறார்கள். படப்பறிவு இல்லாத 30 சதவீதம் பேருக்கு பட்டாசு தொழில் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்காக கடந்த 8 மாதங்களாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது கடந்த ஆண்டைவிட குறைந்த அளவில் தான் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் இங்கு தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சீனபட்டாசு வருகையால் சிவகாசி பட்டாசு விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பட்டாசு ஆலை அதிபர்கள் பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தியை வெகுவாக குறைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பட்டாசு ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சுமார் 60 சதவீதத்துக்கு மேல் பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் இருந்தது. சில பெரிய நிறுவனங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டது. அந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பள பணத்தை கொடுத்தது. இந்த காரணத்தால் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் 4 மாதம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்த பட்டாசு ஆலை அதிபர்களுக்கு அடுத்த பிரச்சினையாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பட்டாசுக்கு அதிகளவில் வரி விதிக்கப்படும் என தகவல் கிடைத்தது. அதிகளவில் வரி விதித்தால் பட்டாசுகளை யாரும் வாங்கி செல்லமாட்டார்கள் என்ற கருத்து பலமாக எதிரொலித்தது. இதை தொடர்ந்து பட்டாசு ஆலை அதிபர்கள் தங்களது உற்பத்தியை வெகுவாக குறைத்துக்கொண்டனர். இந்தநிலையில் டெல்லி உள்பட வடமாநிலங்களில் பட்டாசுக்கு கோர்ட்டு தடை விதித்தது. இதனால் அங்கு செல்ல வேண்டிய சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் அங்கு அனுப்பப்படாமல் தேக்கம் ஏற்பட்டது. இப்படி தொடர்ந்து வந்த பிரச்சினையால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.1000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சிவகாசியில் உள்ள ஆலைகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உற்பத்தி குறைத்ததால் தற்போது பட்டாசுகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பட்டாசு ஆலை அதிபர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம் கூறியதாவது:–
பட்டாசு தொழிலுக்கு அவ்வபோது ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளி முடிந்தவுடன் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாங்கள் உற்பத்தியை குறைத்தோம். அதன் பின்னர் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. இது பெரிய அளவில் பாதித்தது. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 4 மாதம் வரை ஆலைகள் திறக்கப்படாமல் இருந்தது. அதை தொடர்ந்து ஜி.எஸ்.டி. அறிவிப்பு வெளியானது. இதனால் நாங்களே முன் வந்து குறிப்பிட்ட சதவீத உற்பத்தியை குறைத்துக்கொண்டோம். சிவகாசி பகுதியில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையால் சில நாட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த ஆண்டை விட விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் மொத்த வியாபாரிகளுக்கும், வெளி மாநில வியாபாரிகளுக்கும் தேவையான பட்டாசுகள் அனுப்ப முடியவில்லை. இதனால் வெளி மாநில வியாபாரிகளுக்கு பல லட்சம் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.