கல்வி கடன் வழங்க கோரி வங்கி முன்பு கணவன்–மனைவி தீக்குளிக்க முயற்சி
குன்னூர் அருகே கல்வி கடன் வழங்க கோரி வங்கி முன்பு கணவன்–மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்,
குன்னூர் அருகே உள்ள சானிடோரியம் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் எட்வின் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஷோபியா. இவர்களது மகள் புஷ்பசாலினி. இவர் பிளஸ்–2 முடித்து விட்டு ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், கடந்த 4 மாதங்களாக ஓட்டல் நிர்வாகம் படிப்பு படித்து வருகிறார். எட்வின் ஆட்டோ டிரைவர் என்பதால் தனது மகளின் படிப்பு செலவை ஈடுகட்ட முடியாத நிலையில் இருந்தார்.
இதைத்தொடர் எட்வின் வெலிங்டன் பேரக்சில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கல்வி கடன் ரூ.2 லட்சம் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். வங்கி நிர்வாகம் கல்வி கடன் வழங்காமல் கால தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த எட்வின் நேற்று திடீரென்று தனது மனைவி ஷோபியா உடன் பேரக்சில் உள்ள வங்கிக்கு வந்தார். வங்கி முன்பு திடீரென்று தான் கொண்டு வந்த கேனில் இருந்த டீசலை தன் மீதும், தன் மனைவி மீதும் ஊற்றிக்கொண்டு கல்விக்கடன் கொடுக்க வேண்டும் என்று 2 பேரும் கோஷம் எழுப்பியபடி தீக்குளிக்க முயன்றனர்.
உடனடியாக வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள், போலீசார் எட்வினையும், அவரது மனைவி ஷோபியாவையும் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தி, வங்கிக்குள் அழைத்துச்சென்றனர். அங்கு வெலிங்டன் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் வெலிங்டன் போலீசார் எட்வினையும், அவரது மனைவி ஷோபியாவையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கூறியதாவது:–
கணவன், மனைவி இருவரிடமும், வங்கி மேலாளரிடமும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த உள்ளோம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்களிடம் புகார் செய்திருக்கலாம். புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை மேற்கொண்டிருப்போம். ஆனால் தீக்குளிப்பது, தற்கொலைக்கு முயல்வது போன்ற செயல்கள் தவறானது. விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் சரியான முறையில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கணவன், மனைவி தீக்குளிக்க முயன்ற வங்கி எம்.ஆர்.சி. ராணுவ முகாம் அருகில் உள்ளது. எட்வின் மற்றும் அவரது மனைவி ஷோபியா டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற போது வங்கி முன்பு மக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த ராணுவ வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திற்கு வந்து என்ன நடந்தது என்று விசாரணை மேற்கொண்டனர். ஒரு ராணுவ வீரர் கீழே கொட்டி கிடந்த டீசலை ஆய்வு மேற்கொண்டார். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.