ஆதிவாசி மக்கள் வசிக்கும் கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை


ஆதிவாசி மக்கள் வசிக்கும் கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 7 Oct 2017 4:00 AM IST (Updated: 7 Oct 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஆதிவாசி மக்கள் வசிக்கும் கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கொலக்கம்பை,

கொலக்கம்பை அருகே உள்ள தமிழக–கேரள எல்லைப்பகுதியையொட்டி வனப்பகுதிகளில் முப்பர்காடு, முள்ளி, கீழ் முள்ளி, வீரக்கம்பை, நெடுகல்கம்பை, பரளிகாடு, பெரும்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆதிவாசி மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். கேரள வனப்பகுதியில் உள்ள மாவோயிஸ்டுகள் தமிழக வனப்பகுதிக்குள் நுழையாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆதிவாசி மக்களின் கிராமங்களுக்குள் புகுந்து மாவோயிஸ்டுகள், அவர்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் பரவியது. இதனை தடுக்கும் வகையில் தமிழக–கேரள இரு மாநில போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன்படி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில் போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொலக்கம்பை அருகே உள்ள வீரக்கம்பை ஆதிவாசி கிராமத்தில் நக்கல் தடுப்பு பிரிவு போலீசார் 20–க்கும் மேற்ப்பட்டோர் கையில் துப்பாக்கி ஏந்தி கொண்டு கிராம பகுதிகள், வனப்பகுதிகளில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வசிக்கும் ஆதிவாசி மக்களிடம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனடியாக போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். அவர்களிடம் மாவோயிஸ்டு நடமாட்டம் உள்ளதா? என்று விசாரணை நடத்தினர். மேலும் ஆதிவாசி மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டுகொண்டனர்.

பின்னர் மள்ளப்பள்ளம், பெரும்பள்ளம் வழியாக இறங்கி கெத்தை வனப்பகுதியிலும், அங்குள்ள ஆதிவாசி கிராமங்களிலும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


Next Story