வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் நீரில் மூழ்கி பலியான மாணவன் உடல் மீட்பு
தேனி அருகே வீரபாண்டியில் முல்லைப்பெரியாற்றில் மூழ்கி பலியான மாணவன் உடல் மீட்கப்பட்டது.
தேனி,
தேனி மாவட்டம், போடி வினோபாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் விஜய் (வயது 13). இவர் போடியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் காலையில் விஜய் தனது நண்பர்கள் 2 பேருடன் தேனி அருகே உள்ள வீரபாண்டிக்கு வந்தான். காலை 11 மணியளவில் அங்குள்ள முல்லைப்பெரியாறு தடுப்பணையில் 3 பேரும் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மாணவன் விஜய் நீரில் மூழ்கினான்.
இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விஜய்யை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு வரை தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் அவனை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து 2–வது நாளாக நேற்றும் மாணவனை தேடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர். பொதுமக்களும் அவர்களுக்கு உதவியாக ஆற்றுக்குள் இறங்கி விஜய்யை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
வீரபாண்டி புறவழிச்சாலையில் உள்ள பாலத்தை கடந்து தேடிய போது, அங்கே மாணவன் விஜய் உடல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சிக்கி இருந்தது. அதனை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். பின்னர் மாணவனின் உடலை தீயணைப்பு படையினர் கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு நின்ற அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் அவனுடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் பலியானதை தொடர்ந்து வீரபாண்டியில் முல்லைப்பெரியாற்றின் தடுப்பணைக்கு செல்லும் வழியில் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை நேற்று வைக்கப்பட்டது.