மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருகிறது கால்வாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருவதால் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம்,
குடியாத்தத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் மோர்தானா அணை உள்ளது. இந்த அணை கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் புங்கனூர், பலமனேர், நாயக்கனேரி உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் மழை பெய்தால் கவுண்டன்ய மகாநதியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது.
392 மீட்டர் நீளம் உள்ள இந்த அணையின் முழு உயரம் 23.89 மீட்டர் ஆகும். இதன் நீர்த்தேக்க உயரம் 11.5 மீட்டர் ஆகும். இந்த அணையின் கொள்ளளவு 262 மில்லியன் கனஅடி ஆகும். இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ஜிட்டப்பல்லி செக் டேமில் நிரம்பிய பின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக திறந்து விடப்படுகிறது. மேலும் கவுண்டன்ய ஆற்றின் வழியாகவும் தண்ணீர் செல்கிறது.
வலது, இடதுபுற கால்வாய்கள் மற்றும் கவுண்டன்ய மகாநதியில் திறந்து விடப்படும் தண்ணீரால் வழியில் உள்ள ஜிட்டப்பல்லி, கொட்டாரமடுகு, சேம்பள்ளி, ரங்கசமுத்திரம், அக்ராவரம், தட்டப்பாறை, பெரும்பாடி, பாக்கம், அம்மணாங்குப்பம், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வழியில் உள்ள ஏரிகளிலும் தண்ணீர் சென்று சேரும்.
மோர்தானா அணைக்கு முக்கிய நீர்ஆதாரமான ஆந்திர மாநில எல்லைப்புற காட்டுப்பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலம் புங்கனூர், பலமனேர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் மோர்தானா அணைக்கு தண்ணீர் வர தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 9.50 மீட்டராகவும், நீர் இருப்பு சுமார் 200 மில்லியன் கனஅடியாகவும் உயர்ந்துள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து வந்தால் ஒரு சில நாட்களில் மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் அக்டோபர் மாதமே அணை நிரம்பும் சூழ்நிலை உள்ளதால் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நீர்ஆதாரங்களில் நீர்மட்டம் உயரும். விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் பஞ்சம் இருக்காது. அனைத்து ஏரிகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேவேளையில் வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் செடி, கொடிகளை அகற்றவும், ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களை தூர் வாரி தண்ணீர் செல்ல முன்எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.