சி.பி.எஸ்.இ. பெயரில் மெட்ரிக் பள்ளி நடத்தி மோசடி பள்ளி தாளாளர் உள்பட 4 பேர் கைது


சி.பி.எஸ்.இ. பெயரில் மெட்ரிக் பள்ளி நடத்தி மோசடி பள்ளி தாளாளர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2017 4:45 AM IST (Updated: 7 Oct 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.எஸ்.இ. பெயரில் மெட்ரிக் பள்ளி நடத்தி கூடுதலாக பணம் வசூலித்து மோசடி செய்ததாகவும், அதை தட்டிக்கேட்ட பெற்றோர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறி பள்ளி தாளாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் தனியாருக்கு சொந்தமான வேளாங்கண்ணி பப்ளிக் ஸ்கூல் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சி.பி. எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பாடம் நடத்துவதாக கூறி மெட்ரிக் பாடம் நடத்தி வருவதாகவும், சி.பி.எஸ்.இ.க்கு இணையாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்ப தரும்படி கோரிக்கை வைத்தனர். அதற்கு பள்ளி நிர்வாகம் வருகிற கல்வி ஆண்டுக்கான கட்டணத்தில் இருந்து கழித்துக்கொள்வதாக கூறியது.

ஆனால் பள்ளி தொடங்கப்பட்டு இதுவரை கூடுதலாக வசூலித்த பணத்தை கட்டணத்தில் கழிக்காததுடன், இந்த ஆண்டுக்கான கட்டணத்தை கட்டும்படி பள்ளி நிர்வாகத்தினர் மாணவ- மாணவிகளை வற்புறுத்தியதாகவும், இதுபற்றி தட்டிக்கேட்ட பெற்றோரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி கொடுங்கையூரை சேர்ந்த வெங்கடேசன் போலீசில் புகார் செய்தார். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று பள்ளியை முற்றுகையிடப்போவதாக பெற்றோர் அறிவித்தனர்.

இதனால் வெங்கடேசன் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அன்பழகன் உத்தரவிட்டார். அதன்பேரில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிந்து பள்ளி தாளாளரான போரூரை சேர்ந்த சந்தானமுத்து (வயது 71), அவருடைய மகன் தேவராஜ் (41), மருமகன் ரவிதுரைசிங் (41) மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த ரமேஷ் (41) ஆகியோரை கைது செய்தார்.

Next Story