இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் தலைசிறந்து விளங்குகிறது முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி அருணாச்சலம் பேட்டி


இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் தலைசிறந்து விளங்குகிறது முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி அருணாச்சலம் பேட்டி
x
தினத்தந்தி 7 Oct 2017 3:30 AM IST (Updated: 7 Oct 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி அருணாச்சலம் கூறினார்.

சரவணம்பட்டி,

கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் எந்திரவியல் மற்றும் வானியல் துறை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ), சதீஷ் தவான் விண்வெளி மையம் ஆகியவை சார்பில் சர்வதேச விண்வெளி வாரத்தையொட்டி ‘காஸ்மோரினா–17‘ என்ற தலைப்பில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த கண்காட்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதற்கு கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.குமார் தலைமை தாங்கினார். பேராசிரியர் பிரேம்குமார் வரவேற்றார். இணை தாளாளர் சங்கர் வானவராயர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி அருணாச்சலம் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:–

உலக நாடுகளை பொருத்தவரை விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது. செவ்வாய் கிரகத்துக்கு முதன்முறையாக ‘மங்கள்யான்‘ செயற்கைகோளை வெற்றிகரமாக அனுப்பிய நாடு இந்தியா. ரஷ்யா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் பல்வேறு முயற்சிக்கு பின்னர் தான் இந்த வெற்றியை பெற்றன. ஆனால் இந்தியா முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டது.

சமீபத்தில் நமது விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் 144 செயற்கைகோள்கள் ஒரே விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன. இது உலக சாதனை ஆகும். இந்த தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா முன்னோடியாக திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ– மாணவிகளுக்கு விண்வெளி ஆராய்ச்சியின் புதிய தொழில்நுட்பம், ராக்கெட் தயாரிப்பு, ஈரோ, இஸ்ரோ திட்டங்கள் ஆகியவற்றை எடுத்துக்கூறும் வகையிலும், நீர் ராக்கெட், ஆஸ்ட்ரோ புகைப்படம், சந்திர ரோவர் ஆகிய மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்திய விமானப்படை சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் விமானப்படையின் செயல்பாடுகள், தூண்டுதல்கள் குறித்து விமானப்படை தளபதி கவுரவ் பிரதாப் மாணவ– மாணவிகளுக்கு விளக்கினார்.

இது தவிர பள்ளி மாணவ– மாணவிகளுக்கு வினா விடை, ஓவியம், அறிவியல் ஆராய்ச்சி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 300–க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story