கமல்ஹாசன் கட்சி தொடங்குவதை வன்மையாக கண்டிக்கிறோம்
கமல்ஹாசன் கட்சி தொடங்குவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறோம் என்று வேடசந்தூரில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
வேடசந்தூர்,
இந்து முன்னணி ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வேடசந்தூருக்கு வந்திருந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா வருகிற 12–ந் தேதி சென்னை காமராஜர் அரங்கில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அழைத்துள்ளோம். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அவரும் வருவதாக உறுதியளித்துள்ளார். அதுமட்டுமின்றி திரைப்பட கலைஞர்களும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த காலம் வேறு. தற்போது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். சமுதாயத்தில் தூய்மை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக கூறியுள்ளார். அவரிடம் ஒழுக்கம் இல்லை.
இவர் எப்படி மக்களுக்கு சேவை பணியாற்றுவார் என்பது தெரியவில்லை. அதனால் நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட தலைவர் மாரிமுத்து உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.