பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2017 4:30 AM IST (Updated: 7 Oct 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கல்யாண சுந்தரம், செயலாளர் நாகரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ராமலிங்கம், மாநில சிறுபான்மையினர் குழு துணை தலைவர் தமீம் அன்சாரி, மாநில உறுப்பினர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வறட்சியால் வேலை இல்லாத விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, தீபாவளி பண்டிகை உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்த வேண்டும். தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் விவசாய சங்கத்தை சேர்ந்த செல்வம், தமிழரசி, பாமா, விஜயா, சுசிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவசாமி, செயலாளர் முருகையன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நாகராஜன் தொடங்கி வைத்தார்.

கீழ்வேளூர், தேவூர், வலிவலம் ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மருத்துவக்குழுவினரை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். வறட்சியால் வேலை இல்லாத விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, தீபாவளி பண்டிகை உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாபுஜி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

வறட்சியால் வேலையை இழந்த விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தீபாவளி உதவித்தொகையாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மாசிலாமணி, சவுரிராஜன், ரமேஷ், சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகராஜன் நன்றி கூறினார். அதனைத்தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தத்திடம் (நிர்வாகம்) கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அதேபோலவேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிவகுரு பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் நாராயணன், ஒன்றிய பொருளாளர் நாகராஜன், ஒன்றியத்தலைவர் வைத்திலிங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது வறட்சியால் வேலை இழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தீபாவளி உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Next Story