உறவுக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை


உறவுக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை
x
தினத்தந்தி 7 Oct 2017 3:10 AM IST (Updated: 7 Oct 2017 3:09 AM IST)
t-max-icont-min-icon

உறவுக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பிம்பலூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). வெளிநாட்டில் வேலை செய்த இவர், கடந்த 2011-ம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்து விவசாய பணிகளை கவனித்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை, மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும் கடந்த 2014-ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத போது அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து வந்து மணிகண்டன் திருமணம் செய்தார். இதையறிந்த மணிகண்டனின் தாய் கருப்பாயி (65), அக்காள் அஞ்சலை (40), உறவினர் ஆறுமுகம் (45) உள்ளிட்டோர் ஆத்திரமடைந்து அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டனர். அதன் பின்னர் வேறொருவரை மணமுடிக்க அந்த பெண் தயாரானபோது அதற்கு மணிகண்டன் இடையூறு செய்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் மணிகண்டன், அவரது தாய் கருப்பாயி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணிகண்டன் தனது உறவினர் ஒருவரது மகளான 16 வயது சிறுமியை திருமணம் செய்து, அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம், சிறுமியை திருமணம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மணிகண்டன், கருப்பாயி, அஞ்சலை, ஆறுமுகம் ஆகியோரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.

கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை நடந்த போது, மணிகண்டனை காப்பாற்றி கொள்ளும் பொருட்டு அவர் தன்னை திருமணம் செய்யவில்லை என கூறி அச்சிறுமி மறுத்தார். இதற்கிடையே அச்சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மணிகண்டன், அந்த சிறுமி, அவரது குழந்தை ஆகியோருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் 3 பேரின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போனதால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கோர்ட்டு உறுதி செய்தது. இதுவே இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று, மகிளா கோர்ட்டு நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு கூறினார். அதில், குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்தல் சட்டம் 2012-ன் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பிரிவு 506(1)-ன்கீழ் கருப்பாயி, அஞ்சலை, ஆறுமுகம் ஆகியோருக்கு 2 ஆண்டு சாதாரண சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இந்த தண்டனைகளை குற்றவாளிகள் அனைவரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மணிகண்டன் மீது சுமத்தப்பட்ட சில குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அதிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். குழந்தை திருமண தடுப்பு சட்ட பிரிவின் கீழ் சாட்சியங்கள், ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்கப்படாததால் சந்தேகத்தின் பலன்களை வழங்கி அதிலிருந்து மணிகண்டன் உள்பட 4 பேரும் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 வயது பெண் மற்றும் அந்த சிறுமிக்கு உரிய இழப்பீடு வழங்கித்தர சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கு கோர்ட்டு பரிந்துரை செய்தது. தீர்ப்பு வெளியீட்டின் போது கோர்ட்டில் தனது குழந்தையுடன் நின்று கொண்டிருந்த அந்தபெண் (தற்போது மேஜர்) கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்நிலையில் மணிகண்டன் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story