கல்குவாரியில் வெடி வைக்கும் பணி நடந்த போது பாறைகள் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி


கல்குவாரியில் வெடி வைக்கும் பணி நடந்த போது பாறைகள் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 7 Oct 2017 4:30 AM IST (Updated: 7 Oct 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

கல்குவாரியில் வெடி வைக்கும் பணி நடந்தபோது, பாறைகள் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் இருந்து ரெட்டைமலை செல்லும் வழியில் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் துளையிடும் எந்திரம் மூலம் துளையிட்டு, அதில் டெட்டனேட்டர் மூலம் வெடிக்கச்செய்து பாறைகளை உடைத்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று காலை பாறையை உடைக்க வெடி வைக்கும் பணியில் 6 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அவர்களில் 4 பேர் குவாரியின் மேல் பகுதியில் நின்று வேலை பார்த்தனர்.

திருச்சி புங்கனூர் கொத்தனார் தெருவை சேர்ந்த செந்தில் (வயது 35), அதேபகுதி புதுத்தெருவில் வசித்த செல்வம்(50) ஆகிய 2 தொழிலாளர்கள் மட்டும் குவாரியின் கீழ் பகுதியில் 200 அடி ஆழத்தில் நின்று துளையிடும் எந்திரம் மூலம் பாறையில் துளையிட்டு கொண்டு இருந்தனர். அப்போது அதிர்வு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழத்தொடங்கின. தொடர்ந்து பாறைகள் செந்தில், செல்வம் ஆகியோர் மீது விழுந்து அமுக்கியதால், அவர்களின் அலறல் சத்தம் கூட வெளியே கேட்கவில்லை. அதே இடத்திலேயே துடித்துடித்து இறந்தனர்.

சிறிதுநேரத்தில் குவாரியின் மேலே வேலை பார்த்து கொண்டு இருந்தவர்கள் கீழே நின்ற செந்தில், செல்வம் ஆகிய 2 பேரையும் காணாமல் திடுக்கிட்டனர். அவர்கள் அங்குமிங்கும் தேடி பார்த்தபோது, வேலை பார்த்த இடத்தில் குவாரியில் இருந்து பெயர்ந்து விழுந்த பாறை கற்கள் குவிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பதறி அடித்துக்கொண்டு கீழே ஓடி வந்தனர். அங்கு குவிந்து கிடந்த பாறைகளை அப்புறப்படுத்தினர். அப்போது அதன் அடியில் 2 பேரும் உடல் நசுங்கி இறந்து கிடந்தனர்.

இதனை கண்டதும் மற்ற தொழிலாளர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதுபற்றி உடனடியாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த 2 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் குவாரி உரிமையாளர் போஸ்கோ ஆரோக்கியராஜ், மேலாளர் தங்கவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, குவாரியில் விதிமுறைகள் ஏதும் மீறப்பட்டுள்ளதா? தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் வேலை செய்தார்களா? என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு குத்தகை அனுமதி பெற்று இருந்த இந்த கல்குவாரியை சீல் வைக்க திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் முன்னிலையில் உடனடியாக கல்குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது.

Next Story