வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது


வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 7 Oct 2017 3:29 AM IST (Updated: 7 Oct 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் பூம்புகார் துறைமுக கழக நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனருமான அண்ணாமலை மற்றும் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் மேம்பாடு குறித்தும், வறட்சி நிவாரண பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது குளித்தலை பகுதியில் பொது சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் ஆய்வு செய்து, கொசு மருந்து அடிக்கப்பட்டதை உறுதி செய்து கொண்டு அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொது சுகாதார வளாகம் அமைத்து கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினர். மேலும் கரூர் ஊராட்சி ஒன்றியம், வேட்டமங்கலம் ஊராட்சி, குந்தானிபாளையத்தில் சுகாதார பணிகள் மற்றும் குடிநீர் வினியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து ஆத்தூர் நத்தமேட்டில் அமைக்கப்பட்ட குளத்தை பார்வையிட்டு மழைநீர் மூலம் சேமிக்கப்பட்ட நீர் இருப்பின் அளவை ஆய்வு செய்தனர்.

பின்னர் திருக்காம்புலியூர் ஊராட்சி மாயனூரில் அமைக்கப்பட்ட அம்மா பூங்காவை பார்வையிட்டனர். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி, விமல்ராஜ், வேளாண் துறை இணை இயக்குனர் பாஸ்கரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாக ஊரக வளர்ச்சி முகமை, கூட்டுறவுத்துறை, கால்நடைத்துறை, பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட தொழில் மையம், சமூக பாதுகாப்பு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் வாயிலாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும், மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வறட்சி நிவாரண பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

Next Story