மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்


மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Oct 2017 3:51 AM IST (Updated: 7 Oct 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் சிவானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் மழைக்காலங்களில் மின் விபத்துகளை தடுக்க மின் வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்பாதையில் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அவற்றின் அருகில் செல்வதையோ, தொடுவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள் பழுதடைந்திருந்தாலோ, சாய்ந்த நிலையில் இருந்தாலோ பொதுமக்கள் அவற்றை தொடாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கால்நடைகளை மின்கம்பத்திலோ, இழுவை கம்பியிலோ கட்டக்கூடாது. மின் தடையை சரிசெய்யும் பொருட்டு மின்கம்பத்திலோ, மின் மாற்றியிலோ ஏறி பழுதுபார்க்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது.

பொதுமக்கள் தங்கள் சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும்போது அருகில் மின்பாதை கம்பிகள் சென்றால் அதனருகில் செல்லாமலும், மின்பாதையை தொடாமலும் கவனமாக பணியை மேற்கொள்ள வேண்டும். டிராக்டர் மற்றும் லாரிகளில் சரக்குகளை மின்கம்பிகளை உரசும் அளவிற்கு உயரமாக கட்டி எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மின்பாதைக்கு அருகில் கட்டிடம் கட்டும்போது போதிய இடைவெளி விட்டு பணியை மேற்கொள்ள வேண்டும். திருவிழா காலங்களில் தேரோட்ட நிகழ்ச்சிக்கு முன் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து உரிய அனுமதி பெற வேண்டும்.

 உயரமான வாகனங்கள், டிப்பர் லாரிகளை மின் கம்பிகளுக்கு கீழே இயக்குவதை தவிர்க்க வேண்டும். வயல்களில் மின்வேலிகளை அமைப்பது தண்டனைக்குரிய குற்றம். மின்சாரம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகங்கள் மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story