தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்று நடும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்று நடும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Oct 2017 3:00 AM IST (Updated: 7 Oct 2017 9:30 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்று நடும் பணியை கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்று நடும் பணியை கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

மரக்கன்று நடும் பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. முதற்கட்டமாக மருதூர் அணைக்கட்டின் கீழ்பகுதியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை வரையிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களை தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்களின் பங்களிப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றி வருகின்றனர்.

தொடர்ந்து மருதூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்று நடும் பணியை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேற்று காலையில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் அடர்ந்து வளர்ந்த புதர்செடிகளை அகற்றி சுத்தம் செய்தார். அதன்பிறகு ஸ்ரீவைகுண்டம் பிச்சனதோப்பு தாமிரபரணி ஆற்றங்கரையிலும் மரக்கன்று நட்டார். ஸ்ரீவைண்டம் தடுப்பணையில் அமலைசெடிகளை அகற்றும் பணியையும் தொடங்கி வைத்தார். பின்னர் தடுப்பணையில் உள்ள அமலைசெடிகளை பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.

பசுமை மாவட்டமாக மாற்ற...

பின்னர் கலெக்டர் வெங்கடேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றங்கரையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதனை அனைவரும் பேணி பாதுகாக்க வேண்டும்.

மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டில் இருந்து ஆத்தூர் வரையிலும் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். இந்த பணிகள் ஒவ்வொரு 5 கிலோ மீட்டர் தூரமாக படிப்படியாக மேற்கொள்ளப்படும். விடுமுறை நாட்களில் மாணவ–மாணவிகள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக அரசு அலுவலகங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், வனச்சரக அலுவலர் நெல்லைநாயகம், குமரகுருபர சுவாமிகள் கல்லூரி முதல்வர் சங்கர நாராயணன், அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன், கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், துணை தலைவர் கந்தசிவசுப்பு, துணை செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story