மகளிர் சுயஉதவிக் குழு சார்பில் ஷூ தயாரிக்கும் அலகு


மகளிர் சுயஉதவிக் குழு சார்பில் ஷூ தயாரிக்கும் அலகு
x
தினத்தந்தி 8 Oct 2017 5:00 AM IST (Updated: 7 Oct 2017 10:55 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திலேயே முதன்முதலாக ஆம்பூரில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் ஷூ தயாரிக்கும் அலகை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.

ஆம்பூர்,

மத்திய அரசின் தேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி பகுதியில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக ஷூ தயாரிப்பு அலகு (யூனிட்) தொடங்க அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்அடிப்படையில் 3 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 45 பெண்களுக்கு ஷூ தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியின் நிறைவாக ஆம்பூர் சான்றோர்குப்பம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பாக ரூ.22 லட்சம் மதிப்பிலான ஷூ தயாரிப்பு அலகு அமைக்கப்பட்டது.

அதன் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் சிவராமன் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர் ஜெயகாந்தன் வரவேற்றார்.

அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு ஷூ யூனிட்டை தொடங்கி வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.

நிகழ்ச்சியில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எம்.மதியழகன், தாசில்தார் மீராபென்காந்தி, நகராட்சி உதவி பொறியாளர் ஜெயக்குமார், பணியாளர்கள் பிரேம், ஆனந்தன், மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமுதாய அமைப்பாளர் ஜேசுபால்மர் நன்றி கூறினார்.

இந்த ஷூ தயாரிக்கும் அலகானது மூலப்பொருட்கள் வாங்குதல் முதல் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் முழுவதும் பெண்களாலேயே செய்யப்பட உள்ளதால் இது தனித்தன்மை மிக்கதாக உள்ளது. மேலும் இது தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட ஷூ தயாரிக்கும் அலகாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story