பாலாற்றில் மூழ்கிய வாலிபரின் உடல் 3 நாளைக்கு பிறகு மீட்பு


பாலாற்றில் மூழ்கிய வாலிபரின் உடல் 3 நாளைக்கு பிறகு மீட்பு
x
தினத்தந்தி 8 Oct 2017 4:00 AM IST (Updated: 7 Oct 2017 10:55 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி பாலாற்றில் மூழ்கிய வாலிபரின் உடல் 3 நாளைக்கு பிறகு மீட்கப்பட்டது.

வாணியம்பாடி,

வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குளிப்பதற்காக கடந்த 5–ந் தேதி பெரியபேட்டை பகுதியை சேர்ந்த இம்தியாஸ் (வயது 20), அவரது நண்பர் அல்தாப் (20) ஆகிய 2 பேர் சென்றனர். பாலாற்றில் குளிக்கும் போது திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் 2 பேரும் சுழல் பகுதியில் சிக்கி கொண்டனர். இதனை அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு இம்தியாஸை மீட்டனர். அல்தாபை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் அங்கு சென்று அல்தாபை தேடும் பணியில் ஈடுபட்டனர். அன்று இரவு வரை அல்தாப் கிடைக்காததால் தேடும் பணி கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். அவர்கள் தங்களால் வாலிபரை மீட்க முடியவில்லை என கூறி மீட்பு பணியை கைவிட்டனர்.

இதனையடுத்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்து அல்தாப்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலாற்றில் பெரும் வெள்ளம் வந்ததால் பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 5 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனே பொதுமக்களும், தீயணைப்பு துறையினரும், போலீசாரும் இணைந்து கயிறு கட்டிக் கொண்டு தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 5 பேரையும் உயிருடன் மீட்டனர். இந்த சம்பவத்தால் அல்தாபை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. இதில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். தேடும் பணியை துரிதப்படுத்த அமைச்சர் நிலோபர் கபில் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், நகர செயலாளர் சதாசிவம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எம்.கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரம், தாசில்தார் முரளிகுமார் மேற்பார்வையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவி கமி‌ஷனர் ராஜப்பா தலைமையில், 30 பேர் கொண்ட குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பகல் 12 மணி அளவில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள முட்புதருக்குள் அல்தாப் உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மீட்பு குழுவினர் உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story