சுயதொழில் கடன்களுக்கான மானிய ஒதுக்கீடு உயர்வு கலெக்டர் நடராஜன் தகவல்


சுயதொழில் கடன்களுக்கான மானிய ஒதுக்கீடு உயர்வு கலெக்டர் நடராஜன் தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:15 AM IST (Updated: 8 Oct 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

சுயதொழில் கடன்களுக்கான மானிய ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையத்தில் இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் சுய தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய பல கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் அதிகபட்ச முதலீடு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட மானிய ஒதுக்கீடு ரூ.36 லட்சத்து 67 ஆயிரத்தில் இருந்து ரூ.45 லட்சமாக உயர்த்தப்பட்டுஉள்ளது.

இத்திட்டத்தின்படி குறைந்தபட்சம் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பொதுப்பிரிவினர் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்ற சிறப்பு பிரிவினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். முதலீட்டாளரின் பங்கு பொதுப்பிரிவினராக இருப்பின் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினராக இருப்பின் 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் கடன்பெற கல்வி தகுதி தேவையில்லை. வயது வரம்பு, வருமான உச்சவரம்பு இல்லை. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அரசு மானியத்துடன் இத்திட்டத்தில் வங்கிகளின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச திட்டத்தொகையாக 25 லட்சமும், சேவை தொழில்களுக்கு ரூ.10 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.

உற்பத்தி தொடர்பான தொழில் திட்ட முதலீடு ரூ.10 லட்சத்துக்கு மேலும், சேவை தொழில் திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்துக்கு மேலும் பெற விரும்புவோர் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் 15 சதவீத மானியமும், ஊரக பகுதிகளில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம் மானியமும் பெறலாம். சிறப்பு பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கும்பட்சத்தில் 25 சதவீத மானியமும், ஊரகப்பகுதியில் தொழில் தொடங்கும்பட்சத்தில் 35 சதவீதம் மானியமும் பெறலாம்.

எனவே இத்திட்டம் பற்றிய விளக்கங்கள் பெறவும், வாய்ப்புள்ள தொழில்களை தேர்ந்தெடுத்து தொழில் தொடங்கவும் ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு வருகிற 11–ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை முகாமும், தகுதியான நபர்களுக்கு உடனடி நேர்காணலும் நடத்தப்பட உள்ளது. தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர் தங்களது பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம்–2, கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக வருபவர்களுக்கு விண்ணப்பம் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து தரப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பை தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story