மாநிலங்களின் உணர்வுகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது: தா.பாண்டியன் பேட்டி
மாநிலங்களின் உணர்வுகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறினார்.
காரைக்குடி,
காரைக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தேர்தலுக்கு முன்பு மோடி கொடுத்த வாக்குறுதிகளையும், பதவி பொறுப்பேற்ற பின்னர் அவர் எடுத்த நடவடிக்கையும் என அனைத்தையும் பார்த்தால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் நன்கு செயல்பட்ட பல தொழிற்சாலைகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் நிறுவனங்கள் மோடி பதவியேற்ற பிறகு மூடப்பட்டுவிட்டன. இதனை ஹவாலா நடவடிக்கையின் கீழ் கண்டறியப்பட்ட கேடி நிறுவனங்கள் என்கிறார். மேலும் கருப்பு பண நடவடிக்கையால் அவர்கள் வீழ்ந்துவிட்டார்கள் என்றும் மோடி வர்ணித்திருக்கிறார். இந்நிறுவனங்கள் மூடப்பட்டதால் இந்தியாவில் சுமார் 15 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். தொழிலாளர்கள் மட்டுமல்ல அந்நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களும் இழப்பீட்டை சந்தித்திருக்கிறார்கள். இந்தியாவின் உற்பத்தி குறைந்திருக்கிறது. ஏற்றுமதியும் குறைந்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. பொருளாதாரம் 5.7 சதவீதம் என்கிறார்கள். சரியாகக்கூறினால் 3 சதவீதமாக குறைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
காஷ்மீர் விவகாரத்தில் ராணுவ வீரர்கள் மட்டுமல்ல ஒரு தவறும் செய்யாத நிரபராதி மக்களும் கொல்லப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க மத்திய அரசு அரசியல் ரீதியாக தீர்வுகான முயற்சிக்க வேண்டும். மேகாலயா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச்சேர்ந்த மக்களுக்கு தனித்திருந்தால் முன்னேறலாம் என்கிற எண்ணம் வளரத்தொடங்குகிறது. மாநிலங்களின் உணர்வுகள், சட்டபேரவையின் தீர்மானங்களைக்கூட மத்திய அரசு புறக்கணிக்கிறது. மாநிலங்களை ஒடுக்க முயற்சிக்கிறது. எனவே அரசியல் சட்டத்தை மறுபரிசீலனை செய்து மாநிலங்கள் முழு அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். மத்தியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாக இல்லாமல் தனி நபர் ஆட்சியாக நடைபெறுகிறது. ஒரு சர்வாதிகாரி உருவாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு மிக வேகமாக பின்னோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. எனவே மக்கள் பிரச்சினைகளை அரசு கவனிக்கவேண்டும். இல்லையெனில் மக்களின் தீர்ப்பை பெறுவதற்கு முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கட்சியின் நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராஜா, சண்முகசுந்தரம், சரவணன் மற்றும் மக்கள் மன்ற தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.