குழந்தை பெற்ற மனைவியை பார்க்க சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவர் சாவு


குழந்தை பெற்ற மனைவியை பார்க்க சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவர் சாவு
x
தினத்தந்தி 8 Oct 2017 3:45 AM IST (Updated: 8 Oct 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் குழந்தை பெற்ற மனைவியை பார்க்க சென்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா லெப்பைக்குடிக்காடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹை (வயது 42). இவருடைய மனைவி சயினாபானு. இவருக்கு, பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகேயுள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவமனையில் குழந்தையை பார்த்ததும் மகிழ்ச்சியில் இருந்த அப்துல் ஹை தனது மனைவியையும் உடனிருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த மருத்துவமனை அருகே டிபன் வாங்குவதற்காக அப்துல் ஹை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் திடீரென அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த அப்துல் ஹையை மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அப்துல் ஹை பரிதாபமாக இறந்தார்.

இதையறிந்த அவரது மனைவி கதறி துடித்தது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் அப்துல் ஹையின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை ஓட்டி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்துல் ஹையின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் வழியாக செல்லும் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஓட்டியபடியே அந்த தனியார் மருத்துவமனை இருப்பதால் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் சிறு, சிறு தேவைகளுக்காக வெளியே வந்து அங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். அப்போது இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முற்படும் போது அடிக்கடி விபத்து நடப்பது வாடிக்கையாகிவிடுகிறது. சில சமயங்களில் உயிரிழப்புகளும் நிகழ்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மருத்துவமனை நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்கும் பொருட்டு அங்கு நடைபாதை மேம்பாலம் அமைப்பது, போக்குவரத்தினை போலீசார் கண்காணிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story