வருமானத்தில் 60 சதவீதத்துக்கு மேல் செலவு: தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்க வேண்டும்
‘வருமானத்தில் 60 சதவீதத்துக்கு மேல் செலவு ஆவதால் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதி களை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்க வேண்டும்’ என்று தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் ஜேக்கப் பேசினார்.
கோவை,
தமிழ்நாடு தோட்ட தொழில் அதிபர்கள் சங்க 64–வது ஆண்டு விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னி கிளப்பில் நேற்றுக்காலை நடந்தது. இதில் தமிழ்நாடு தோட்ட தொழில் அதிபர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் ஜேக்கப் கலந்து கொண்டு பேசியதாவது:–
தென்னிந்தியாவில் தேயிலை உற்பத்தி கடந்த ஆண்டு ஒரு கோடியே 60 லட்சம் கிலோ குறைந்தது. இதனால் விலை சற்று உயர்ந்தது. ஆனால் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் கடந்த மாதம் வரை தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தேயிலை விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு 26 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேயிலை உற்பத்தி நிறுவனங்களின் மொத்த வருவாயில் 60 சதவீதம் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதியில் செய்யப்படும் குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம், குடியிருப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்வதற்கே செலவாகி விடுகிறது. இந்த வசதிகள் அனைத்தும் இலவசமாக தேயிலை தோட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்து கொடுக்கப்படுகின்றன.
ஆனால் இந்த அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கடமையாகும். தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகள் வரி வசூலிக் கின்றன. ஆனால் அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை. எனவே தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு செய்யும் இத்தகைய செலவுகள் மூலம் தேயிலை தொழிற்சாலைகளின் செலவு அதிகரிக் கிறது.
இது தொடர்பாக ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளுக்கான செலவை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்க வேண்டும்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வங்கியில் தான் சம்பளம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தேயிலை தோட்டங்கள் உள்ள பகுதிகளில் வங்கிகள், ஏ.டி.எம். எந்திரங்களை அமைக்க வேண்டும்.
கேரளா, மேற்குவங்காளத்தை போன்று தோட்டங்களில் தேயிலை, காபி, ரப்பர் ஆகியவை தவிர மாற்று பணப்பயிர்கள் மற்றும் மூலிகை செடிகளை பயிரிட அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் தேயிலை தொழிற்சாலைகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். நில நிர்வாக சீர்திருத்த சட்டத்தின்படி தேயிலை, காபி தவிர வேறு பயிர்களை பயிரிட அனுமதி இல்லை.
கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநில அரசுகள் நில நிர்வாக சீர்திருத்தத்தில் தேவையான மாற்றங்களை செய்து தேயிலைக்கு பதில் மாற்று பயிர்களை பயிரிட அனுமதித்திருப்பதை போன்று தமிழக அரசும் மாற்று பயிர்களை பயிரிட அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கேரள மாநில தொழில் மேம்பாட்டு கழக தலைவர் கிறிஸ்டி பெர்னாண்டஸ், தென்னிந்திய தோட்ட தொழில் அதிபர்கள் சங்க(உபாசி) தலைவர் டி.ஜெயராம். எல்.ஜி. எக்யூப்மெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜெயராம் வரதராஜ், வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, தொழிற்சங்க நிர்வாகிகள் சஞ்சய் பாண்டியன், முத்தையா, சவுந்தரபாண்டியன், சுந்தரராஜ் மற்றும் ஏராளமான தேயிலை தோட்ட அதிபர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில், சங்க துணை தலைவர் சேகர் நாகராஜன் நன்றி கூறினார். முன்னதாக அதிக மதிப்பெண் பெற்ற தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.