மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. மேலும் இயற்கை சீற்றம் ஏற்படும் சமயங்களில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
தேனி,
தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதற்கு கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பேரிடர் மேலாண்மை என்பது இயற்கை சீற்றத்தின் காரணமாக ஏற்படும் புயல், மண்சரிவு, மழை ஆகியவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது ஆகும். இந்த பணிகளில் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது, ஆற்றங்கரை, கண்மாய், ஓடை பகுதிகளில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்லும் வழித்தடங்களை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இயற்கை இடர்பாடுகளில் சிக்காமல் எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இயற்கை சீற்றம் எப்போது ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. எனவே எத்தகைய சூழ்நிலையிலும் பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் திறம்பட செயல்பட வேண்டும். தேனி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதால் மண்சரிவு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
அந்த சூழலில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அதிகாரிகள் நன்கு பயிற்சி எடுக்க வேண்டும். இதற்காகவே பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இயற்கை சீற்றம் ஏற்படும் போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை விளக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது. இதில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து பொதுமக்களை எவ்வாறு பத்திரமாக மீட்டுச்செல்வது என்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.