புஞ்சைபுளியம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ–மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் சாவு
புஞ்சைபுளியம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ, மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி,
திருப்பூர் குமரபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 50). கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் நாகேந்திரன் (45). 2 பேரும் தங்க நகை ஆபரணம் செய்யும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் நேற்று திருப்பூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சொந்த வேலை விஷயமாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த விண்ணப்பள்ளி நூற்பாலை அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோவும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தைவேல், நாகேந்திரன் ஆகியோர் இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.