மின்கம்பத்தின் மீது அமர்ந்து வேலை செய்யும்போது தொழிலாளர்கள் செல்போனில் பேசக்கூடாது


மின்கம்பத்தின் மீது அமர்ந்து வேலை செய்யும்போது தொழிலாளர்கள் செல்போனில் பேசக்கூடாது
x
தினத்தந்தி 8 Oct 2017 4:15 AM IST (Updated: 8 Oct 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

மின்கம்பத்தின் மீது அமர்ந்து வேலை செய்யும்போது மின்வாரிய தொழிலாளர்கள் செல்போனில் பேசிக்கொண்டு வேலை செய்யக்கூடாது என திருப்பூரில் நடந்த மின் வாரிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி முகாமில் மின்சார வாரிய செயற்பொறியாளர் சண்முகம் பேசினார்.

திருப்பூர்,

திருப்பூர், பல்லடம், அவினாசி, காங்கேயம் கோட்டங்களின் சார்பில் மின் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி முகாம் திருப்பூர் வளையன்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் சண்முகம் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர்கள் சிவசாமி (திருப்பூர்), ராஜாமணி (பல்லடம்), தசரதன் (அவினாசி), சுமதி (பொது), கலைச்செல்வி (பராமரிப்பு) ஆகியோர் முன்னிலைவகித்தனர். உதவி செயற்பொறியாளர் ராம்பிரகாஷ்(கோவை), ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் சங்கரன் (சேலம்), கணக்கு அலுவலர் (ஓய்வு) ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் மேற்பார்வை பொறியாளர் சண்முகம் பேசியதாவது:–

திருப்பூர் மாவட்டத்தில் அடிக்கடி மின் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் மின் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிர் இழந்து வருகிறார்கள். எனவே மின் தொழிலாளர்கள் பாதுகாப்புக்காகவே இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மின்கம்பங்களில் ஏறி வேலை செய்யும்போது மதுகுடித்து இருக்க கூடாது. மன அழுத்தத்தில் இருக்கும்போது வேலை செய்யக்கூடாது. அதே போல அவசரமாக வேலையை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. அதிக நேரம் செய்ய வேண்டிய வேலையாக இருந்தால் தொடர்ந்து செய்யாமல், சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பிறகு செய்யலாம்.

அதேபோல தெரியாத வேலையை செய்யக்கூடாது. வேலையில் கவனக்குறைவு இருக்கக்கூடாது. தெளிவான மனநிலையுடன் வேலை செய்ய வேண்டும். மின் கம்பத்தின் மீது அமர்ந்து கொண்டு வேலை செய்யும் போது செல்போனில் பேசக்கூடாது, ரோட்டில் நடக்கும் சம்பவங்களை வேடிக்கை பார்க்கக்கூடாது, முக்கியமாக மேற்பார்வையாளர்கள் இல்லாமல் வேலை செய்யக்கூடாது.

இந்த வேலையை இப்படித்தான் செய்யவேண்டும். அதற்கு என்னென்ன உதிரிபாகங்கள் வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும். எர்த் ராடுகளை உபயோகிக்காமல் வேலை செய்யக்கூடாது. மின் கம்பத்தில் ஏறுவதற்கு முன் மின்மாற்றியில் உள்ள 3 இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளனவா? என்று சரி பார்த்து விட்டு, கையுறைகளை அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும். இவ்வாறு முறையாக மிகவும் கவனமாக வேலை செய்தால் விபத்துகளை தடுக்க முடியும். எனவே தொழிலாளர்கள் நமக்கு பின்னால் ஒரு குடும்பம் உள்ளது என்பதை மனதில் கொண்டு, மேற்கொண்டு எந்தவித விபத்துகளும் ஏற்படாதவாறு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் 10–க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்த செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் மின்வாரிய அலுவலக பணியாளர்கள், தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். இந்த முகாமில் மின் தொழிலாளர்களுக்கு இலவச கண்சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சரவணன் செய்திருந்தார்.


Next Story