தமிழகத்தில் செயல்படுத்தப்படும் கெயில் திட்டத்தால் எந்த பிரச்சினையும் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


தமிழகத்தில் செயல்படுத்தப்படும் கெயில் திட்டத்தால் எந்த பிரச்சினையும் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 8 Oct 2017 4:30 AM IST (Updated: 8 Oct 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் கெயில் திட்டத்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருப்பூர்,

பாரதீய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேவை மையம் திறப்பு விழா மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா திருப்பூர் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள எல்.ஜி. தோட்டம் பகுதியில் நேற்று நடந்தது. விழாவுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் நடராஜ் தலைமை தாங்கினார்.

வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி, கோட்ட இணைப்பொறுப்பாளர் பாயிண்ட் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் சண்முக சுந்தரம் வரவேற்று பேசினார். மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சேவை மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் எந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். எந்த காரணத்தினாலும் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகக்கூடாது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததாலேயே பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

இந்து இயக்க சகோதரர்களின் படுகொலையை கண்டித்து கேரளா மாநிலம் பாலக்காட்டில் பாதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் 9–ந்தேதி (நாளை) நடக்கிறது. இந்த பாதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் கோவையில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்று கலந்து கொள்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரி அனந்தகுமார் தலைமை தாங்குகிறார். தமிழகத்தில் சிறுபான்மை மதங்கள் மற்றும் அந்த மதங்களை சேர்ந்தவர்கள் மதிக்கப்படுகிறார்கள். ஆனால் பெரும்பான்மை மதத்தை சார்ந்தவர்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சித்து உதாசீனப்படுத்தலாம் என்று பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

மழை வேண்டி முதல்–அமைச்சர் ஏழுமலையான் கோவிலுக்கு செல்வதையும் விமர்சிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். என்பது தேசபக்த இயக்கம். இதன் ஊர்வலத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்குகிறார் என்ற அறிவிப்பு வந்த உடன் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதர மதங்களின் ஊர்வலங்களுக்கு தலைமை தாங்கினால் மட்டும் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஜி.எஸ்.டி.யை பொறுத்தமட்டில் தற்போது 27 பொருட்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. சிறு வணிகர்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்தால் போதும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இனிப்பு வகைகள், துணி வகைகளுக்கான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்து நடக்க உள்ள ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பட்டாசுக்கான வரி சலுகை அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தமிழக கவர்னர் பதவியேற்ற பின்பு மு.க.ஸ்டாலினை மேடையில் அமர வைக்காதது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, கவர்னர் பதவியேற்பின்பு மு.க.ஸ்டாலினை மேடையில் அமர அனுமதிக்காதது தவறான ஒன்றுதான். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அதிகாரிகள் அதை திருத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் கெயில் திட்டம் குறித்து பிரதமர் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று கூறுகிறார். அப்போதில் இருந்தே இதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு அடிபணிந்து போய்விட்டதாக அரசியல் தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சட்ட திட்டங்களை செயல்படுத்தவே தமிழக அரசு இணக்கமாக செல்கிறது. ‘நீட்’ தேர்வினால் அரசியல் செய்யலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்களின் கனவு பலிக்காமல் போய்விட்டது. உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பல போலி ரே‌ஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன.

மத்திய, மாநில அரசுகள் நல்லது செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற அரசியல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதே கோவை, திருப்பூர் நவீன நகரங்களாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. திருப்பூர் மக்கள் ஜவுளி, கைத்தறியில் துறை மீது வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. வாட் வரியை குறைத்து குஜராத்தில் பெட்ரோல் ரூ.50–க்கு விற்பனை செய்யப்படுவது போல தமிழகத்திலும் செய்ய வேண்டும். தமிழகத்தில் சிறு, சிறு கேபிள் உரிமையாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எந்த அதிகார மையம் இதற்கு காரணமாக இருக்கிறதோ அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் பிடியில் மாநில அரசு ஆட்சி செய்யவில்லை. டெங்குவை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்–அமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் டெங்குவுக்கு சிகிச்சையை கொண்டு வரவேண்டும். இதற்காக மத்திய அரசிடம் கூட உதவி கேட்கலாம். பல போலி மருத்துவர்கள் டெங்குவுக்கு சிகிச்சை என்ற பெயரில் சம்பாதிக்கின்றனர். இதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து சிறுவர், சிறுமிகளின் யோகா நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. முடிவில் 2–ம் மண்டல தலைவர் கே.செந்தில் குமார் நன்றி கூறினார்.

பின்னர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு மத்திய அரசின் எரிவாயு சிலிண்டர் மற்றும் கியாஸ் அடுப்பு வழங்கும் விழா அவினாசியில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு எரிவாயு சிலிண்டர் மற்றும் கியாஸ் அடுப்புகளை வழங்கி பேசினார். மொத்தம் 16 பெண்களுக்கு, எரிவாயு சிலிண்டர் மற்றும் கியாஸ் அடுப்பு வழங்கப்பட்டது. விழாவில் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் கதிர்வேல், மாவட்ட செயலாளர் சண்முகம், நகர தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story